நஜிப், இர்வான் மீது ரிம6.6பில்லியன் நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டு

 

அரசாங்க நிதியிலிருந்து ரிம6, 636, 065, 000 கிரிமினல் நம்பிக்கை மோசடி செய்ததாக முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மற்றும் முன்னாள் கருவூல தலைமைச் செயலாளர் இர்வான் செரிஹர் அப்துல்லா ஆகியோர் மீது ஆறு குற்றச்சாட்டுகள் இன்று கோலாலம்பூர் செசன்ஸ் நீதிமன்றத்தில் சுமத்தப்பட்டன.

நீதிபதி அஸ்மான் அஹமட் முன் அக்குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. நஜிப், 65, மற்றும் இர்வான், 61, குற்றச்சாட்டுகளை மறுத்தனர்.

புத்ரா ஜெயா, நிதி அமைச்சின் வளாகத்தில் அவ்விருவரும் டிசம்பர் 21, 2016-லிருந்து டிசம்பர் 18, 2017-க்கும் இடையில் அக்குற்றங்களைப் புரிந்ததாக கூறப்பட்டது.

அவர்கள் இருவரும் தண்டனை சட்டத் தொகுப்பு (பீனல் கோட்) செக்சன் 409 கீழ் குற்றம் சாட்டப்பட்டனர். இத்துடன் அதே சட்டத்தின் செக்சன் 34-யும் சேர்த்துக் கொள்ளும் போது, குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டால் 20 ஆண்டு கால சிறைதண்டனை, கசையடி மற்றும் அபராதம் ஆகியவை விதிக்கப்படும்.

அரசாங்கத் தரப்பை முன்னாள் பெடரல் நீதிமன்ற நீதிபதி கோபால் ஶ்ரீராமும், நஜிப்பை வழக்குரைஞர் முகம்மட் ஷாபி அப்துல்லாவும், இர்வானை வழக்குரைஞர்கள் குமரேந்தரன் மற்றும் கீதன் ராம் வின்சென்ட் ஆகியோரும் பிரதிநிதித்தனர்.

இதனுடன், அரசாங்கத்திற்கு சொந்தமான யுஎஸ்$12.1 மில்லியனை நம்பிக்கை மோசடி செய்ததாக முன்னாள் உளவுத் துறை தலைவர் ஹசானா அப்துல் ஹமிட் மீது சுமத்தப்பட்ட ஒரு குற்றச்சாட்டை அவர் மறுத்து விசாரணை கோரினார்.