சவூதி அரேபியாவிலிருந்து பல பில்லியன் ரிங்கிட்களை அப்போதைய பிரதமர் நஜிப் ரசாக் பெற்றது “உண்மையான நன்கொடை” என்று 2016 ஆம் ஆண்டில் கூறிய சவூதி அரேபிய வெளியுறவு அமைச்சர் அடெல் அஹமட் அல்-ஜுபெர் மூன்று-நாள் வருகையை மேற்கொண்டு இப்போது மலேசியாவில் இருக்கிறார்.
பெர்னாமா செய்திப்படி, அவர் நேற்று இங்கு வந்தார். அவர் இன்று மலேசிய வெளியுறவு அமைச்சரை விஸ்மா புத்ராவில் இன்று சந்தித்த பின்னர், நாளை பிரதமர் மகாதிரை சந்திக்கிறார்.
ஏப்ரல் 2016 இல், அடெல் இஸ்தான்புலில் மலேசிய வெளியுறவு அமைச்சர் அனிபா அமானைச் சந்தித்தார். அப்போது, நஜிப்பின் வங்கிக் கணக்கில் இருக்கும் பல பில்லியன் ரிங்கிட் பற்றி அவரிடம் கேட்கப்பட்டது.
1எம்டியின் பணம் தவறாகப் பயன்படுத்தப்படவில்லை. அது சவூதி அரேபிய அரச குடும்ப உறுப்பினர் ஒருவர் அளித்த நன்கொடை என்று நஜிப் தொடர்ந்து கூறி வந்தார்.
இதற்கு எதிர்வினையாற்றிய அடெல், அந்த நன்கொடை பற்றி எங்களுக்குத் தெரியும். அது உண்மையானது. அது திருப்பித் தரப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இல்லை என்றாரவர்.
மலேசிய சட்டத் துறை தலைவர் இந்த விவகாரத்தை முழுமையாக விசாரணை செய்து அதில் தவறான செயல் ஏதும் இல்லை என்று கூறியிருப்பதையும் நாங்கள் அறிவோம் என்று அடெல் மேலும் தெரிவித்திருந்தார்.
ஆகவே, எங்களைப் பொறுத்தவரையில் அதுமுடிந்த போன விவகாரம் என்று அடெல் கூறியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து, நஜிப்பைத் தற்காப்பதற்கு பிஎன் அரசாங்கம் அடெலின் அறிக்கையைச் சுட்டிக் காட்டி வந்தது.
மே 9 பொதுத் தேர்தலில் பிஎன் தோற்கடிக்கப்பட்டது. அதன் பின்னர் இந்த விவகாரம் மீண்டும் விசாரிக்கப்பட்டு வருகிறது.