மனித உரிமைகளுக்காக போராடும் அமைப்புகளையும் சமூக ஆர்வலர்களையும் போலீசார் மிரட்டுவதைத் தடுத்து நிறுத்துமாறு அரசுசார்பற்ற அமைப்புகள் (என்ஜஓ) பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளன.
“என்ஜிஓ உறுப்பினர்களும் அரசியல்வாதிகளும், நடப்பு அரசாங்கத்தைச் சேர்ந்தவர்கள் உள்பட, மக்களின் உரிமைகளுக்காகவும் பிரச்னைகளுக்காகவும் போராடும்போது போலீசால் மிரட்டப்படுகிறார்கள், கைது செய்யப்படுகிறார்கள். இது ஜனநாயகத்தைக் கீழறுக்கும் செயலாகும்.
“புதிய அரசாங்கத்தை அமைத்தபோது மாற்றங்களை- குறிப்பாக அமலாக்கத்துறையிலும் பாதுகாப்பிலும் போலீசிலும் மாற்றங்களைச் செய்யப்போவதாக வாக்குறுதி அளித்தனர்.
“என்றாலும், மலேசியா பாரு அமைந்து ஐந்து மாதங்கள் ஆன பிறகும் போலீஸ் மிரட்டல் தொடர்கிறது”, என சுவாராம் செயல் இயக்குனர் சேவன் துரைசாமி இன்று பெட்டாலிங் ஜெயாவில் சுவாராம் அலுவலகத்தில் கூறினார்.
அமைதிப் பேரணிச் சட்டம் 2012, மனித உரிமைப் போராட்டவாதிகளை மிரட்ட இன்னமும் பயன்படுத்தப்படுகிறது என்றாரவர்.
புதிய அரசாங்கம் அமைக்கப்பட்ட பின்னர் தம்மையே போலீஸ் முன்று முறை விசாரணைக்கு அழைத்திருப்பதாகவும் அவர் சொன்னார்.