23 ஆண்டுகால வீட்டுப் பிரச்சனைக்கு, எம்பிஃப் ஹோல்டிங்ஸ் தீர்வு கொடுக்க வேண்டும், பாடாங் மேஹா தோட்டத் தொழிலாளர்கள் கோரிக்கை

23 ஆண்டுகளாக நீடித்துவரும் வீட்டு இழப்பீட்டுப் பிரச்சனைக்கு, எம்பிஃப் ஹோல்டிங்ஸ் ஒரு தீர்வு கொடுக்க வேண்டுமெனக் கோரி, நேற்று காலை பாடாங் மேஹா முன்னாள் தோட்டத் தொழிலாளர்கள், கோலாலம்பூர் எம்பிஃப் ஹோல்டிங்ஸ் கோபுரத்தின் முன்புறத்தில் மறியலில் ஈடுபட்டனர்.

கெடாவில் இருந்து, நேற்று காலை கோலாலம்பூர் வந்த அந்த முன்னாள் தொழிலாளர்களும் அவர்தம் குடும்பத்தினரும், கைகளில் பதாகைகளை ஏந்தி, ‘எங்களுக்கு எங்கள் வீடு வேண்டும்’, ‘எம்பிஃப் எங்களுடன் கலந்துபேச வா, ஓடி ஒளியாதே’ என்று குரல் எழுப்பினர்.

எம்பிஃப் ஹோல்டிங்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி நினியன் மோகன் லோர்டினடின், 1990 முதல் நீடித்துவரும் இப்பிரச்சனையில் தலையிட்டு, ஒரு தீர்வு கொடுக்க வேண்டும் என்றும், அதுபற்றி தங்களுடன் கலந்துபேச வேண்டும் என்றும் கோரி ஒரு கடிதத்தையும் அவர்கள் சமர்ப்பித்தனர்.

கடந்த மார்ச் 12, 1995-ல், எம்பிஃப் கண்ட்ரி ஹோம்ஸ் & ரிஷோர்ட் சென். பெர். (அதன்பிறகு அலமென்டா டெவலப்மென்ட் செட். பெர். என அறியப்படும்) நிறுவனத்திடம், பாடாங் மேஹா தோட்டம் விற்கப்பட்டபோது, அங்குப் பணியில் இருந்த 200-க்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்கள், எந்தவொரு இழப்பீடும் இல்லாமல், வேலையிலிருந்து நிறுத்தப்பட்டனர்.

2011-ம் ஆண்டு, அலோர் ஸ்டார் உயர்நீதிமன்றம், அத்தோட்டத்தின் முன்னாள் தொழிலாளர்கள் ஒவ்வொருவருக்கும், இழப்பீடு மற்றும் வீட்டிற்குப் பதிலாக ஒரு கூடுதல் பணமாக, RM 22,500 பெற உரிமை உண்டு எனத் தீர்ப்பளித்தது. இருப்பினும், அலமென்டா டெவலப்மென்ட் செட். பெர். நிறுவனம் திவாலாகிவிட்டது என்ற அறிவிப்பின் காரணமாக, அத்தொழிலாளர்களுக்கு இதுவரை எந்தவொரு இழப்பீடும் கொடுக்கப்படவில்லை.

உயர் நீதிமன்றத்தில் வெற்றிபெற்ற பாடாங் மேஹா தோட்டத் தொழிலாளர்கள், பலமுறை பேச்சுவார்த்தைகள் நடத்தியும், அவர்களுக்குச் சேரவேண்டிய இழப்பீட்டுத் தொகை கைவந்து சேரவில்லை. அத்தொழிலாளர்களில் 70-க்கும் மேற்பட்டவர்கள் இன்று உயிரோடு இல்லை, இழப்பீட்டை வாங்காமலேயே அவர்கள் இறந்துபோயினர்.

வீடுகள் கோரிக்கை தொடர்பான ஒரு நீதிமன்ற வழக்கில் தோல்வி கண்டதால், இப்போது அவர்கள் கட்டாய வெளியேற்றத்தின் விளிம்பில் இருக்கின்றனர். எனவே, இச்சிக்கலுக்குத் தீர்வுகாண, தலைமை நிறுவனம் எனும் வகையில் எம்பிஃப் ஹோல்டிங்ஸ் தலையிட வேண்டுமென அவர்கள் எதிர்பார்க்கின்றன.

நேற்று காலை, முன்னாள் பாடாங் மேஹா தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக, மலேசிய சோசலிசக் கட்சியின் (பி.எஸ்.எம்.) நகரமுன்னோடிகள் மற்றும் வீடமைப்புப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேஸ், பி.எஸ்.எம். மத்திய செயலவை உறுப்பினர்களான எஸ் அருட்செல்வன் மற்றும் டாக்டர் டி ஜெயக்குமார் உட்பட பொது மக்களும் எம்பிஃப் கோபுரத்தின் முன் கூடியிருந்தனர்.

மறியலில் ஈடுபட்டவர்களை வெளியே வந்து சந்தித்த பின்னர், அவர்களின் கோரிக்கைகளுக்கு விரையில் பதிலளிப்பதாகவும், இன்னும் இரண்டு வாரங்களில் அவர்களைச் சந்திக்க ஒரு தேதியை நிர்ணயிக்கப்போவதாகவும் எம்பிஃப் பிரதிநிதி உறுதியளித்தார்.

23 ஆண்டுகளாக நீடித்துவரும் இப்பிரச்சனைக்கு ஒரு சுமூகமான தீர்வு காணப்படும்வரை ஓயப்போவதில்லை என்று அத்தொழிலாளர்கள் உறுதியாகக் கூறினர்.