இன்று காலை சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்ட 31 வயதான, பிரபு பத்மநாதன் எனும் மலேசியர், சிறையில் முடங்கிக் கிடந்த கடைசி நிமிடங்களில், தனது கடைசி செய்தியைப் பகிர்ந்துகொள்ள விரும்பினார்.
போதைப் பொருள் விநியோகித்தார் எனும் குற்றத்திற்காக, மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட சில மணிநேரத்திற்குப் பிறகு, பிரபுவின் சில புகைப்படங்கள், “இரண்டாவது வாய்ப்பு, நாங்கள் நம்புகிறோம்” எனும் முகநூல் பக்கத்தில் பகிரங்கமாகப் பகிரப்பட்டது.
“போதைப் பொருளில் ஈடுபடக் கூடாது எனும் செய்தியை, பொது மக்களிடம் சேர்க்க அவர் விரும்பினார்,” என அம்முகநூல் செய்தியில் கூறப்பட்டிருந்தது.
பிரபு தன்னுடன் கடைசியாக இருந்த, தன் நண்பர் மற்றும் சகோதரர் மூலமாக அச்செய்தியை வெளியிட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
பிரபுவின் படங்கள் நேற்றிரவு எடுக்கப்பட்டவை என பிரபுவின் நண்பர் கூறியதாக, சிங்கப்பூர் ஆர்வலர், கிரிஸ்டன் ஹான் தனது டுவீட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்தார்.
“எனக்குத் தெரிந்து, சிறைச்சாலை அதிகாரிகள், அவர்களுடைய குடும்பத்தினரிடம் உடைகளைக் கொண்டுவரச் சொல்லி, தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்பாக அவர்களைப் புகைப்படம் எடுத்துகொள்ள அனுமதிப்பார்கள்.
“அப்படங்கள் பிறகு, குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படும்,” என்று, ‘நியூ நெரதீஃப்’ தலைமை எழுத்தாளருமான ஹான் கூறினார்.
அப்படங்களில் அவர் அமைதியாகவும், ஒரு படத்தில் பகவத் கீதையைக் கையில் ஏந்தி, புன்னகைத்தவாரும் இருந்தார்.
பிரபு குடும்பத்தினரைப் பிரதிநிதித்த வழக்கறிஞர் என் சுரேந்திரன், அம்மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது கொடூரமானது என்றும், ‘முறையான செயல்முறையை மீறியது’ என்றும் கருத்துரைத்துள்ளார்.
கடந்த டிசம்பர் 31, 2014-ல், சிங்கப்பூருக்கு 227.82 கிராம் டைமோர்ஃபின் அல்லது ஹெரோயின் போதைப் பொருளைக் கடத்தியக் குற்றத்திற்காக, பிரபுவுக்கு சாகும்வரை தூக்கிலிடும் தண்டனை வழங்கப்பட்டது.