எம்னெஸ்டி : சிங்கப்பூர் தூக்குத் தண்டனையை நிறுத்த வேண்டும்

சிங்கப்பூர் தூக்குத் தண்டனையை நிறுத்த வேண்டும், மரணதண்டனை பிரச்சனையைத் தீர்க்கும் முடிவல்ல என எம்னெஸ்டி இண்டர்நேஷனல் ஓர் அறிக்கையில் கூறியுள்ளது.

மலேசியரான பிரபு மற்றும் பெயர் குறிப்பிடப்படாத இன்னொருவர், இருவரின் தூக்குத் தண்டனையையும் சிங்கப்பூர் அதிகாரிகள் தடுத்து நிறுத்த வேண்டுமென எம்னெஸ்டி இண்டர்நேஷனல் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கேட்டுக்கொண்டது.

மரண தண்டனை விதிப்பது மற்றும் போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுக்கு அதைப் பயன்படுத்துவது, சர்வதேச சட்டம் மற்றும் தரங்களை மீறியச் செயலாகும்.

“சிங்கப்பூர் அதிகாரிகள் உடனடியாக இவர்களைத் தூக்கிலிடும் திட்டத்தை நிறுத்த வேண்டும், அதோடுமட்டுமின்றி அண்மைக்காலமாக நடந்துவரும் இந்த அநாகரீகமான மரணத் தண்டனையைத் தடுக்க வேண்டும்”, என்று சிங்கப்பூர் எம்னெஸ்டி இண்டர்நேஷனல் ஆராய்ச்சியாளர் ரேஷல் கோவா-ஹோவர்ட் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

“சிங்கப்பூர் மரண தண்டனையை மீளமைக்க வேண்டும், அனைத்து மரண தண்டனைகளையும் இடைநிறுத்தி, அனைத்து குற்றங்களுக்குமான இந்தக் கொடூரமான தண்டனையை இரத்து செய்வதற்கான திட்டங்களை அறிவித்துள்ள மலேசியாவின் உதாரணத்தைப் பின்பற்ற வேண்டும்.

“உலகின் மூன்றில் இருபங்கு நாடுகளில் இந்தத் தண்டனை இல்லை, இக்கொடூரமான மற்றும் மீளவே முடியாத தண்டனைக்கு எந்தவொரு சமுதாயத்திலும் இடமில்லை.”

இவ்வாண்டு 6 தூக்குத் தண்டனைகள் நிறைவேற்றப்பட்டன

இந்த ஆண்டு மட்டும், போதைப் பொருளில் ஈடுபட்ட குற்றத்திற்காக, சிங்கப்பூரில் நிறைவேற்றப்பட்ட ஆறு மரண தண்டனைகளை எம்னெஸ்டி சர்வதேச அமைப்பு அறிந்திருக்கிறது.

கடந்தாண்டு, இதே போதைப் பொருள் குற்றத்திற்காக, மொத்தம் 8 தூக்குத் தண்டனைகளைச் சிங்கப்பூர் அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது, ஆனால் அவற்றைப் பற்றிய விவரங்கள் பகிரங்கமாக வெளியிடப்படவில்லை என்றும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பு மரண தண்டனையை எதிர்க்கிறது, எந்தவொரு விதிவிலக்கும் இல்லாமல், குற்றத்தின் தன்மை மற்றும் சூழ்நிலையைப் பொருட்படுத்தாமல், குற்றவாளியின் பண்புநலன்களைக் கருதாமல், ஓர் அரசாங்கம் மரண தண்டனையை எவ்வாறு அமல்படுத்துகின்றது என்பதை விவாதிக்காமல், மரண தண்டனையை எம்னெஸ்டி இண்டர்நேஷனல் எதிர்ப்பதாக அந்த அறிக்கையில் உள்ளது.

மரண தண்டனை வாழ்க்கை உரிமை மீறல் மற்றும் கொடூரமான, மனிதாபிமானமற்ற மற்றும் இழிவான தண்டனை ஆகும் என்றும் ரேஷல் கூறியுள்ளார்.

தற்போது, 106 நாடுகள் அனைத்து குற்றங்களுக்கும் மரணத் தண்டனையை இரத்து செய்துவிட்டன. 2017-ல், போதைப் பொருள் தொடர்புடையக் குற்றத்திற்காக 15 நாடுகளில் மரண தண்டனை அமலில் இருந்தது, ஆனால், எம்னெஸ்டியின் பதிவுபடி, சீனா (அரசாங்க இரகசியம் எனக்கூறி புள்ளிவிவரங்களை வெளியிடுவதில்லை), ஈரான், சவுதி அரேபியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் போதைப்பொருள் குற்றங்களுக்காக மரண தண்டனை அமலில் உள்ளது.

  • AMNESTY.ORG