கிளாந்தானுக்கு உதவியதைத் தர்மசங்கடமாகக் கருதுவதாக நிதியமைச்சர் லிம் குவான் ஏங் கூறியுள்ளார்.
தான் எதைச் செய்தாலும் – அம்மாநிலம் கேட்ட உதவியை வழங்க இணக்கம் தெரிவித்தது உட்பட – பாஸ் தன் மீது குற்றம் சுமத்துவதாக, இன்று கோலாலம்பூர் கூட்டரசு பிரதேச டிஏபி மாநாட்டில் பேசிய அவர் கூறினார்.
கிளந்தான் மாநிலம், தனது அரசு ஊழியர்களுக்குச் சம்பளத்தைச் செலுத்த முடியவில்லை என்று கூறியபோது, பாஸ் தலைவர்கள் சான்றுகளை காட்டுமாறு சவால்விட்டதை லிம் நினைவுகூர்ந்தார்.
“சான்றுகளை நான் காட்டினாலும் குற்றம், காட்டாவிட்டாலும் குற்றம்.
“அவர்கள் சம்பளத்டைச் செலுத்த உதவி கேட்டதற்கான சான்றுகளைக் காட்டிவிட்டேன், அக்கோரிக்கைக்கு அனுமதியும் அளித்துவிட்டேன், அரசாங்கமும் ஒப்புதல் அளித்துவிட்டது, இருந்தும் கோபப்படுகிறார்கள்,” என்றார் அவர்.
கோத்தா பாரு எம்பி, தக்கியுடின் ஹஸ்சான் இதுபற்றி கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து, பாஸ் தலைவர்கள் சிலர், லிம் தங்கள் ஆட்சியில் இருக்கும் கிளந்தான் மாநிலத்தை அவமதிப்பதாகக் குற்றஞ்சாட்டினர். அதோடுமட்டுமின்றி, அதற்கான சான்றுகளைக் காட்டச்சொல்லியும் சவால்விட்டனர்.
அதன்பிறகு, கிளந்தான் மாநில அரசின் செயலாளர், நிதியமைச்சுக்கு எழுதி அனுப்பிய, 2018, ஜூன் 18-ம் தேதியிட்ட ஒரு கடிதத்தை லிம் காட்டினார். அக்கடிதத்தில், சம்பளப் பணத்தை வழங்க, புத்ராஜெயாவிடம் கிளந்தான் மாநில அரசு உதவி கேட்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
தன்மீது குற்றம் சுமத்தினாலும், அம்மாநிலம் கேட்ட உதவியை நிச்சயம் நிதி அமைச்சர் என்ற வகையில் பூர்த்தி செய்ய வேண்டியது தனது கடமை என லிம் குவான் எங் கூறினார்.
“அம்மாநில அரசு ஊழியர்கள், சம்பளம் கிடைக்காமல் அவதிபடுவதை, மத்திய அரசு வெறுமனே பார்த்துக்கொண்டிராது,” எனவும் அவர் தெரிவித்தார்.