பிஎன் கூட்டணியின் மறுசீரமைப்பில் பாஸ் கட்சியை இணைக்கும் திட்டங்களை அம்னோ தங்களோடு ஒருபோதும் விவாதிக்கவில்லை என மசீச துணைத் தலைவர், வீ கா சியோங் கூறியுள்ளார்.
அம்னோ தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி, பிஎன் சார்பில் ஒருதலைப்பட்சமாக, பாஸுடன் இணைந்து பணியாற்றும் முயற்சியை அறிவித்துள்ளார் என வீ கூறினார்.
“பிஎன் என்பது கட்சிகளிடையே ஒருமித்த கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட கூட்டணி ஆகும், பிஎன்-னின் விதி அம்னோவின் கைகளில் இல்லை.
“பாஸ்-உடன் இணைந்து செயலாற்றும் முடிவை, எங்களுடன் கலந்துபேசாமல் அம்னோ எடுக்குமானால், பிஎன் கூட்டணியிலிருந்து வெளியேற நாங்கள் சற்றும் யோசிக்க மாட்டோம்”, என்று ஒரு முகநூல் பதிவில் வீ குறிப்பிட்டுள்ளார்.
நேற்று, பிஎன் மறுசீரமைக்கப்படும் என்று அறிவித்த ஜாஹிட், பிஎன் -னின் புதிய தலைமைச் செயலாளர் நஸ்ரி அஜிஸ்-இடம், அக்கூட்டணியுடன் இணைய சாத்தியமான பிற எதிர்க்கட்சிகளைச் சந்திக்கும் பணியை வழங்கினார்.
பாஸ் மட்டுமின்றி, இந்திய முஸ்லிம் காங்கிரஸ் (கிம்மா), மக்கள் சக்தி மற்றும் ஐபிஃப் ஆகிய கட்சிகளையும் பாரிசானில் இணைக்க, நஸ்ரி அணுகுவார் எனத் தெரிவித்தார்.
“அவருடைய முடிவு, அம்னோவை பிரதான அரசியல் பாதையில் இருந்து ஓரங்கட்டும், அம்னோ – பிஎன்-ஐ முடிவுக்குக் கொண்டுவந்தவர் அவர் என வரலாறு அவரை நினைவுக்கூரும்.
“இந்த அழிவில், மசீச தன்னை இணைத்துக்கொள்ளாது. நாங்கள் எங்கள் சொந்த வழியில் செல்வோம்”, என அவர் மேலும் சொன்னார்.
பாரிசானில், மசீச-வின் பிரதிநிதித்துவத்தை, டிசம்பர் 2-ம் தேதி நடைபெறும் தேசிய பிரதிநிதிக் கூட்டத்தில் “தெளிவான முடிவு” எடுக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.
14-வது பொதுத் தேர்தலில் தோல்வியுற்ற பின்னர், 11 உறுப்புக்கட்சிகளைக் கொண்டிருந்த பாரிசானில், தற்போது 3 கட்சிகளே, அதாவது அம்னோ, மசீச மற்றும் மஇகா ஆகியவைவே எஞ்சியுள்ளன. சபா ஐக்கிய மக்கள் கட்சி மற்றும் மைபிபிபி ஆகியவற்றின் நிலைப்பாடு இன்னமும் பிரச்சினையில் உள்ளது.