சாலையோர விளம்பரப் பலகையில் முஸ்தபாவின் முகம் மறைக்கப்பட்டது

தங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்(எம்பி) முஸ்தபா முகம்மட் மீது வெறுப்படைந்துள்ள ஜெலி வாக்காளர்கள் தங்கள் தொகுதியில் உள்ள சாலையோர விளம்பரப் பலகையில் அவரின் முகத்தை மூடி மறைத்துவிட்டார்கள்.

முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பக்கத்தில்  நிற்கும்  முஸ்தபாவின் முகம் ஒரு காகிதம் கொண்டு மறைக்கப்பட்டிருப்பதாக சினார் ஹரியான் இன்று கூறியது.

வெள்ளிக்கிழமை முஸ்தபா பெர்சத்து கட்சியில் சேரப்போவதாக அறிவித்ததை அடுத்து இது நடந்துள்ளது.

அதே வேளையில் ஜெலி மக்கள் பெர்சத்துவில் சேரும் அவரது முடிவையும் கண்டித்திருந்தனர். அது ஒரு வகை துரோகச் செயல் என்றவர்கள் சாடினர்.

வேறு சிலர், ஜெலி அம்னோ தலைவர் அம்னோ வேட்பாளராக போட்டியிட்டுத்தான் ஜெலி நாடாளுமன்றத் தொகுதியிலும் ஆயர் லூனாஸ் சட்டமன்றத் தொகுதியிலும் வென்றார் என்பதால் அப்பதவிகளைத் துறப்பதே முறையாகும் என்றனர்.

அம்னோவின் 40-ஆண்டுக்கால உறுப்பினரான முன்னாள் அனைத்துலக வர்த்தக, தொழில் அமைச்சர், கடந்த மாதமே அம்னோவிலிருந்து வெளியேறப் போவதாக அறிவித்திருந்தார்.

அம்னோவின் போக்கு தம் அரசியல் கொள்கைகளுக்கு “”ஏற்ப இல்லை” என்று குறிப்பிட்ட அவர் “கட்சிக்குப் புத்துயிரூட்ட குறிப்பிடத்தக்க வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை” என்றும் சொன்னார்.