நாடாளுமன்றம் | வாழ்க்கைச் செலவின உதவி (பி.எஸ்.எச்.) திட்ட செயல்முறைகளின் சீரமைப்புப் பணிகளில் அரசாங்கம் இறுதி கட்டத்தில் இருக்கிறது.
கவனமாக ஆய்வுகளை மேற்கொண்ட பின்னர், சில உதவி திட்டங்களை மறுசீரமைத்து உள்ளதாக, நிதி அமைச்சர், லிம் குவான் எங் கூறினார்.
“அதுமட்டுமின்றி, தகுதியற்றவர்களுக்கு உதவி தொகை கிடைப்பதைத் தடுக்கவும், தகுதி உள்ளவர்கள் தவறுதலாக விடுபடாமல் இருப்பதை உறுதி செய்யவும், சமூக நலத்துறை, தேசியப் பதிவு இலாகா, வெளியுறவு அமைச்சு மற்றும் நடைமுறை ஒருங்கிணைப்பு பிரிவு (ஐசியு) ஆகிய அரசாங்க உதவி நிறுவனங்களின் ஒத்துழைப்பையும் நாம் ஒருங்கிணைத்துள்ளோம்,” என்றார் அவர்.
2012-ஆம் ஆண்டில், B40 குழுவினரின் சுமையைக் குறைக்க, 1மலேசியா மக்கள் உதவி திட்டத்தை (பிரிம்) அரசாங்கம் அமுல்படுத்தியது. தற்போது, மேம்படுத்தப்பட்ட உதவி தொகை வழங்கும் புதியமுறையில், 100 விழுக்காடு தொகை பெறுநர்களின் வங்கிக் கணக்கில் சேர்ப்பிக்கப்படும்.
“வங்கிக் கணக்கு இல்லாதவர்களுக்கு, அவர்களின் ஒப்புதலின் அடிப்படையில், வங்கிக் கணக்கு துவக்கப்படும்,” என்றும் அவர் கூறினார்.
எதிர்வரும் நவம்பர் 2-ம் தேதி, வெள்ளிக்கிழமை, 2019 வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது, பி.எஸ்.எச். திட்டத்தின் மறுசீரமைப்பு குறித்து, மேலும் தகவல்கள் தெரிவிக்கப்படும் என்றும் லிம் கூறினார்.