இந்தோனேசியாவில் விமானம் கடலில் விழுந்தது: 188 பயணிகள் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது

இந்தோனேசிய தலைநகர் ஜாகார்த்தாவிலிருந்து 188 பயணிகளுடன் பயணப்பட்ட லயன் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான விமானமொன்று புறப்பட்ட சிறிது நேரத்தில் ஜாவாவுக்கு அப்பால் கடலில் விழுந்து நொறுங்கியதாக அதிகாரிகள் அறிவித்தனர்.

புறப்பட்ட 13 நிமிடங்களில் விமானத்துடனான தொடர்புகள் அறுந்து போனதாகவும் இழுவைப் படகு ஒன்று விமானம் கடலில் விழுவதைக் கண்டதாகவும் இந்தோனேசிய தேடல் மற்றும் மீட்புத் துறை பேச்சாளர் ஒருவர் கூறினார்.

விமானத்தின் நிலை பற்றி வினவியதற்கு, “அது விழுந்து நொறுங்கியது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது”, என அப்பேச்சாளர் யூசுப் லத்திப் குறுஞ்செய்திவழி பதிலளித்தார்.

விமானம் கட்டுப்பாட்டை இழந்ததாக நம்பப்படும் இடத்துக்கு அருகில் அதன் உடைந்த பாகங்கள் கண்டெடுக்கப்பட்டதாக தேடல் மற்றும் மீட்புத் துறைத் தலைவர் முகம்மட் ஷியாகி தெரிவித்தார்.

“விபத்தில் யாரும் தப்பினார்களா என்பது தெரியவில்லை.. தப்பியிருக்க வேண்டும் என்றுத்தான் விரும்புகிறோம், பிரார்த்திக்கிறோம். இப்போதைக்கு எதையும் உறுதியாக சொல்வதற்கில்லை”, என்றார்.