அம்பாங் பிகேஆர் தொகுதித் தலைவர் ஜுரைடா கமருடின் நடப்பு பிகேஆர் தேர்தலில் பண அரசியல் பரவியிருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு எதிராகக் கட்சித் தலைவர்கள் முனைப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இன்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஜுரைடா, முறையான புகார்கள் செய்யப்பட்டாலொழிய நடவடிக்கை எடுக்க இயலாது என்று பிகேஆரின் புகார், கட்டொழுங்குக் குழுத் தலைவர் சைட் உசேன் அலியின் கூறியிருப்பது ஏற்கத்தக்கதல்ல என்றார்.
“இது முந்தைய பிஎன் அரசாங்கத்தை நினைவுப்படுத்துகிறது. அவர்கள் (பிஎன் அரசாங்கத்தின் அதிகாரிகள்) குற்றங்குறைகள் வெளிப்படையாக தெரிந்தாலும் புகாருக்காகக் காத்திருப்பார்கள்.
“முறைகேடுகள் என்று தெரிந்தால் பொறுப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். எதற்காகவும் காத்திராமல் முனைப்புடன் நடந்து கொள்ள வேண்டும்”, என அம்பாங் எம்பி வலியுறுத்தினார்.