முன்னாள் எம்ஏசிசி தலைவர்: 2015-இல் ரிம2.6 பி. மீதான விசாரணை முழுமைபெறவில்லை

நிர்வாகம், நேர்மை, ஊழல்தடுப்பு மீதான தேசிய மையத்தின் தலைவர் அபு காசிம் முகம்மட், 2015=இல் ரிம2.6 பில்லியன் “நன்கொடை” மீது எம்ஏசிசி விடுத்த அறிக்கை அவசரம் அவசரமாக விடுக்கப்பட்ட ஒன்று என்றார்.

அப்போது எம்ஏசிசி தலைவராக இருந்த அபு காசிம், அறிக்கை விடுக்கப்பட்ட வேளை விசாரணை முழுமை அடையாதிருந்தது என்றார்.

“எனக்கு நினைவிருக்கிறது, அவ்விவகாரம் மீதான விசாரணை முழுமை அடைந்து விட்டதாகவோ ரிம2.6பில்லியன் ஒரு நன்கொடை என்றோ எம்ஏசிசி சொன்னதே இல்லை. ஒருவேளை அப்போது பூர்வாங்க விசாரணை வேண்டுமானால் முடிந்திருக்கலாம்.

“விசாரணை முடிவடையும்போது உண்மை வெளிவரும். நான் அமெரிக்கா சென்றேன் எப் பி ஐ-யும் நீதித் துறையையும் சந்திக்க. அப்பணம் ஒரு நன்கொடை அல்ல என்பதை அவர்கள் தெரிந்து வைத்திருந்தார்கள்”, என்றவர் கோலாலும்பூரில் செய்தியாளர்களிடம் கூறினார்.

எம்ஏசிசி, நன்கொடையாளர் என்று கூறப்பட்டவரைச் சந்தித்ததாகவும் ரிம2.6 பில்லியன் ஒரு நன்கொடைதான் எனவும் குறிப்பிட்டு 2015-இல் அறிக்கை வெளியிட்டது பற்றி வினவியதற்கு அது அவசரப்பட்டு விடுக்கப்பட்ட அறிக்கை என்றார்.

“அறிக்கை விடுத்த அந்த நேரத்தில் அதை நன்கொடை என்றோம். அதன் பின்னர் சிலரைச் சந்தித்ததும் எங்களுக்கு உண்மை தெரிய வந்தது”, என்றார்.

மேலும் விவரம் கேட்டதற்கு, “நீதிமன்றத்தில் எல்லா உண்மைகளும் தெரிய வரும்”, என்றுரைத்தார்.