முன்னாள் பிரதமர் நஜிப் இரசாக் மற்றும் கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லீ மாலிக் இருவரும், நாட்டில் இலவசக் கல்விப் பிரச்சினையைப் பற்றி தொடர்ந்து கேலியாக வாதிட்டு வருகின்றனர்.
“பிஜான், ஹெர்மஸ் போன்ற கைப்பைகளையும் வைர மோதிரங்களையும் நம் மனைவிகளுக்கும் குடும்பத்தாருக்கும் வாங்க, மக்கள் பணத்தை நாம் செலவிடாமல் இருந்திருந்தால், இலவசக் கல்வியை இன்று நம்மால் வழங்கியிருக்க முடியும்,” என்று ஒரு முகநூல் பதிவில் மஸ்லீ கூறினார்.
RM42 பில்லியனை ‘விழுங்கிய’ 1எம்டிபி-யை நஜிப் உருவாக்காமல் இருந்திருந்தால், மழலையர் பள்ளி முதல் பல்கலைக்கழக முதல் பட்டம் வரை தரமான இலவசக் கல்வியை நம்மால் வழங்கியிருக்க முடியும். அதுமட்டுமின்றி, அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கும், நான்கு ஆண்டுகளுக்கு, இலவச உணவு மற்றும் போக்குவரத்து வசதிகளையும் நம்மால் ஏற்படுத்தி இருக்க முடியுமென அவர் மேலும் கூறினார்.
“RM2.6 பில்லியனில், சபா மற்றும் சரவாக்கில் நலிந்துபோய் கிடக்கும் பள்ளிப் பிரச்சினைகளையும், உட்புறப் பள்ளிகளில் மின்சாரம் இல்லாதப் பிரச்சினையைத் தீர்க்க முடியும்,” என்று அவர் கூறினார்.
முன்னாள் பிரதமர் நஜிப், பிஎன் காலத்திலேயே ‘ஏறக்குறைய இலவச’மாக இருக்கும் கல்வியை, மீண்டும் ‘இலவசக் கல்வி’ என அறிமுகம் செய்து, மஸ்லீ நற்பெயர் வாங்க முயல்கிறார் எனக் கூறியிருந்தார்.
முந்தைய அரசாங்கம் ஆரம்ப, இடைநிலைப் பள்ளிகளில் இலவசக் கல்வியை அமல்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி, மேற்கல்வி கூடங்களில்கூட மாணவர்கள் 10 விழுக்காடு கட்டணத்தையே செலுத்தவேண்டி உள்ளது, இது கிட்டத்தட்ட இலவசக் கல்வி போன்றதுதான் என நஜிப் கூறினார்.