சீனாவில் இருக்கும் சர்ச்சைக்குரிய தொழிலதிபர் லோ தைக் ஜோ அல்லது ஜோ லோவைக் கண்டுபிடிப்பதில் அரசாங்கத்திற்கு உதவுவதுதான் தனது நோக்கம், மாறாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) விசாரணைகளிலிருந்து தப்பிக்க அல்ல என ஹிஷாமுட்டின் ஹுசேன் வலியுறுத்தினார்.
முன்னாள் பாதுகாப்பு அமைச்சரான அவர், ஒருசிலர் கூறுவதுபோல், எம்ஏசிசி தேடும் அளவிற்கு தான் எந்தவோர் ஊழல் குற்றச்சாட்டுக்களுடனும் சம்பந்தப்படவில்லை, என நம்புவதாகத் தெரிவித்தார்.
“எனக்கு எதிராக எம்ஏசிசி-யின் குற்றச்சாட்டுகள் என்ன? எனக்கு ஊழலில் தொடர்பில்லை, விசாரணை செய்ய வேண்டும் என்றால், ஏன் இன்றுவரை என்னை அழைக்கவில்லை?
“இந்த விஷயத்தில் யார் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பற்றி நான் கவலைப்படவில்லை, எம்ஏசிசி-க்குப் பயப்படுவதாக அவர்கள் கூறினால், என்னை விசாரணை செய்ய விரும்புவதை எம்ஏசிசி வெளிப்படுத்தட்டும்,” என்று அவர் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் ஊடகவியலாளர்கள் சந்தித்தபோது கூறினார்.
ஜோ லோ தொடர்பாக தன்னிடம் இருக்கும் தகவல்களை வழங்கி, தலைமை காவல்துறை அதிகாரி, முகமட் ஃபூஸி ஹருணுக்கு உதவ உள்ளதாகவும் அந்த செம்புரோங் எம்பி தெரிவித்தார்.
“ஜோ லோ-ஐத் தேடி சீனா செல்ல, எனக்கு இப்போது நேரமில்லை, ஆனால் என் வருகையை நான் தெரிவித்துவிட்டேன், அங்குள்ள அதிகாரிகள் என்னுடன் இன்னும் நெருக்கமாகவே இருக்கின்றனர்.
“ஜோ லோ இன்னும் சீனாவில்தான் இருக்கிறாரா என்று தெரியவில்லை. அப்படி அவர் அங்கிருந்தால், அந்நாட்டு அரசாங்கம் ஏன் அவரை மலேசியக் காவல்படையிடம் ஒப்படைக்கவில்லை என்று எனக்கு தெரியவில்லை. இருநாட்டு காவல்துறையின் உறவுகளை மேம்படுத்தி, ஒரு திட்டத்தை வகுக்க வேண்டும்.
சீனா சென்றுவருவதற்கான செலவுகள் பற்றி கேட்டபோது, அது தன்னுடைய தனிப்பட்ட முயற்சி, எனவே செலவுகளைத் தானே ஏற்றுகொள்வதாகவும் அவர் சொன்னார்.
“1எம்டிபி பிரச்சனையைத் தீர்க்க, ஜோ லோ முக்கியமானவர் என அனைவரும் ஒப்புக்கொண்டால், அவரைத் தேடிக் கொடுத்து, பிரச்சனையைத் தீர்க்க நான் தயார். அது என் தனிப்பட்ட விஷயம் என்றால், அதற்கான செலவுகளை ஏற்றுக்கொள்ளவும் நான் தயார்,” என்றார் அவர்.
புத்ராஜெயா அவரது உதவியைக் கேட்கவில்லை என்று ஹிஷாமுடின் கூறினார். ஆனால், சீனத் தலைவர்களுடனான தனது முன்னாள் உறவைப் பயன்படுத்தி, தனது சொந்த அதிகாரத்தில் அரசாங்கத்திற்கு உதவவே தான் முன்வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.