அரசாங்க மருத்துவமனைகளில், துப்புரவுத் தொழிலாளர்களுக்குத் தேசியத் தொழிற்சங்க அமைவிற்கான இரகசிய வாக்களிப்பு வெற்றி பெற்றுள்ளதாக, அதன் நிர்வாகப் பொதுச் செயலாளர் மு.சரஸ்வதி தெரிவித்தார்.
நாடு தழுவிய நிலையில் அரசு மருத்துவமனை மற்றும் கிளினிக்குகளில் பணிபுரியும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட துப்புரவுத் தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்க, தேசியத் தொழிற்சங்கத்தை அங்கீகரிப்பதற்காக நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பில், 53 விழுக்காடு வாக்குகள் பெற்று, இன்று அதன் போராட்டதில் வெற்றி பெற்றிருப்பதாக சரஸ்வதி தெரிவித்தார்.
பல ஆண்டுகள் துடிப்பின்றி இருந்த தொழிற்சங்கத்திற்கு, இரண்டு ஆண்டுகளுக்கு முன் பொறுப்பேற்ற புதிய நிர்வாகக் குழுவினர், தொழிற்சங்கத்திற்கு அங்கீகாரம் கிடைப்பதற்கான பல தொடர் நடவடிக்கையில் இறங்கினர், பல பேச்சுவார்த்தைகள் பேராக் மாநில மற்றும் தேசியத் தொழிற்சங்க பதிவு இலாகாக்களில் நடைபெற்றது.
பின்னர், தொழிற்சங்கத்திற்கான ஆதரவை நிரூபித்துகாட்ட, இரகசிய வாக்கெடுப்பு கட்டம் கட்டமாக அனைத்து மாநிலங்களிலும் நடைபெற வேண்டுமென, மனித வள அமைச்சின் கீழ் இயங்கும் தொழிலுறவு இலாகாவின் முன்னிலையில் முத்தரப்பும் ஒப்புக்கொண்டனர்.
அதன் அடிப்படையில், முதல் கட்டமாகப் பேராக்கில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளிலும் இவ்வாண்டு ஆகஸ்ட் 24-ஆம் தேதி வாக்கெடுப்பு தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, பினாங்கில் நேற்றுத் தொடங்கிய வாக்கெடுப்பில், தொழிற்சங்கத்திற்குப் போதுமான ஆதரவு நிரூபிக்கப்பட்டு, வாக்கெடுப்பு இன்றோடு ஒரு முடிவுக்கு வந்தது.
அதனை அடுத்து, நிர்வாகம், தொழிற்சங்கம் மற்றும் தொழில் உறவு இலாகா ஆகிய மூன்று தரப்புகளும் தொழிற்சங்கத்திற்கு அங்கீகாரம் வழங்குவதற்கான ஓர் உடன்படிக்கையில் கையொப்பமிட்டதாக சரஸ்வதி தெரிவித்தார்.
பல ஆண்டுகளாக, நாடு தழுவிய நிலையில் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளர்கள் ஆறு மாதம், ஒரு வருடம் மற்றும் இரண்டு வருடம் எனக் குத்தகை முறையில் வேலைக்கு அமர்த்தப்படுவதால் பல அடிப்படை உரிமைகளை இழந்து வருகின்றனர் என சரஸ்வதி சொன்னார்.
“சம்பள உயர்வு, கூடுதல் மருத்துவ விடுமுறை, ஆண்டு விடுமுறை மற்றும் ஆண்டு போனஸ் போன்றவற்றை அவர்கள் இழந்து வந்துள்ளனர். அவர்களின் இந்தப் பிரச்சனைகளை நிர்வாகத்தின் பார்வைக்குக் கொண்டுசென்று, பேச்சுவார்த்தை நடத்த தொழிற்சங்கத்தின் இந்த வெற்றி வழிவகுக்கும்,” என மலேசிய சோசலிசக் கட்சியின் தேசியத் துணைத் தலைவருமான சரஸ்வதி கூறினார்.
“ஆகவே, தேசிய நிலையில், அரசு மருத்துவமனை துப்புரவுத் தொழிலாளர்கள் அனைவரும் தொழிற்சங்கத்தில் உறுப்பினர்களாக இணைய வேண்டும்,” என அவர் கேட்டுக்கொண்டார்.