கிளந்தான் சட்டமன்றக் கூட்டத்தில் இரண்டு நாள் கலந்துகொள்ளாத முஸ்தபா முகம்மட் இன்று அதில் கலந்து கொண்டார், அதுவும் பக்கத்தான் ஹரப்பான் பிரதிநிதியாக. கிளந்தான் சட்டமன்றத்தில் உள்ள ஒரே ஹரப்பான் பிரதிநிதி அவர் மட்டுமே.
அம்னோ உச்சமன்ற உறுப்பினராக இருந்த ஆயர் லானாஸ் சட்டமன்ற உறுப்பினர் செப்டம்பரில் அக்கட்சியிலிருந்து விலகி ஹரப்பான் உறுப்புக் கட்சியான பெர்சத்துவில் சேர்ந்தார்.
ஜெலி நாடாளுமன்ற உறுபினருமான முஸ்தபா, கோலாலும்பூரில் சில அவசர வேலைகளைக் கவனிக்க வேண்டியிருந்ததாலும் மருத்துவ சோதனைக்குச் செல்ல வேண்டியிருந்ததாலும் சட்டமன்றத்தின் முதலிரண்டு நாள் கூட்டங்களுக்குச் செல்லவில்லை என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஹரப்பான், கடந்த மே மாத பொதுத் தேர்தலில் கூட்டரசு ஆட்சியைப் பிடிப்பதில் வெற்றி பெற்றாலும் கிளந்தான் மாநிலச் சட்டமன்றத்தில் ஒரு இடத்தைக்கூட அதனால் வெற்றி கொள்ள இயலவில்லை.
முஸ்தபா ஹரப்பானில் சேர்ந்ததை அடுத்து இப்போது கிளந்தான் சட்டமன்றத்தில் அதற்கும் ஒரு இடம் கிடைத்துள்ளது.