அரசாங்கம் அனைத்துலக இனப் பாகுபாடு ஒழிப்பு ஒப்பந்த(Icerd)த்தில் கையொப்பமிடுவதற்குமுன் அது குறித்து நாட்டில் உள்ள எல்லா இனங்களுடனும் விவாதிக்கும் எனப் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறினார்.
மலேசியா பல்லினங்கள் வாழும் நாடு என்பதால் அந்த ஒப்பந்தத்தை ஏற்பது அவ்வளவு எளிதல்ல என்று முன்பே தாம் குறிப்பிட்டிருப்பதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
“மலேசியாவில் உள்ள அனைத்து இனங்களுடனும் கலந்து பேசிய பின்னரே அதில் கையெழுத்திடுவோம்.
“மலேசியா பல்லின நாடு….சில விவகாரங்களைத் தொட்டால் மக்கள் உணர்ச்சிவசப்படுவார்கள் என்பதால் அதை(Icerd) மலேசியாவில் நடைமுறைக்குக் கொண்டுவருவது எளிதல்ல என்று ஏற்கனவே கூறி இருக்கிறேன்”, என்றாரவர்.
இன்று புத்ரா ஜெயாவில் செய்தியாளர்கள் Icerd குறித்து வினவியதற்கு மகாதிர் அவ்வாறு கூறினார்.
அண்மையில், பிரதமர்துறை அமைச்சர் பி.வேதமூர்த்தி, 2019 முதல் காலாண்டுப் பகுதியில் அரசாங்கம் Icerd-இல் கையொப்பமிடும் என்று கூறியதை அடுத்து அம்னோ இளைஞர் பகுதி உள்பட பல தரப்பினர் கொதித்து எழுந்தனர். Icerd பூமிபுத்ராக்களின் சிறப்புரிமைக்கு உத்தரவாதமளிக்கும் அரசமைப்புக்கு முரணானது என்றும் ஆட்சியாளர் மன்றத்தைப் புறக்கணிக்கிறது என்றும் அவர்கள் வாதிட்டனர்.