நாடாளுமன்றத்தில் சவப் பெட்டியுடன் Icerd-எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

மலாய்- முஸ்லிம் என்ஜிஓகளைச் சேர்ந்த சுமார் 100 பேர், மலேசியா அனைத்துலக இனப் பாகுபாடு ஒழிப்பு ஒப்பந்த( Icerd)த்தில் கையொப்பமிடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

நாடாளுமன்றத்தின் தலைவாயிலுக்கு ஒரு கிலோ மீட்டர் தொலைவில் கூடிய அவர்கள், இன, சமய இறையாண்மைக்கு மிரட்டலாக அமையும் முயற்சிகளை எதிர்க்க முஸ்லிம்களும் மலாய்க்காரர்களும் ஒன்றுபட வேண்டும் என்று அறைகூவல் விடுத்தனர்.

“ Icerd நாசமாய் போகட்டும், Icerd ஒழிக, Icerd-டை நிராகரிக்கிறோம்”, என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் முழக்கமிட்டனர். ஐநாவின் மனித உரிமை ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதன்வழி நாட்டின் இறையாண்மையைப் பலியிட முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக எச்சரிக்கும் வாசகங்கள் அடங்கிய அட்டைகளையும் அவர்கள் கைகளில் ஏந்தி இருந்தனர்.

சவப் பெட்டி ஒன்றையும் கொண்டு வந்திருந்தனர். அது நாட்டில் மலாய்-முஸ்லிம்களின் இறப்பின் அடையாளம் என்றும் அவர்கள் கூறிக் கொண்டனர்.

காலை மணி 11-க்கு பாஸ் கட்சியினர்- தலைவர் அப்துல் ஹாடி ஆவாங், துணைத் தலைவர் துவான் மான், மத்திய செயல்குழு உறுப்பினர் நிக் அப்டு நிக் அப்துல் அசீஸ் உள்பட- ஆர்ப்பாட்டக்காரர்களை சந்தித்தனர். பின்னர் அவர்கள் ஆர்ப்பாட்டக்காரர்களின் பிரதிநிதிகளுடன் சேர்ந்து அரசாங்கத்திடம் மகஜர் கொடுக்க நாடாளுமன்றத்தை நோக்கிச் சென்றனர்.

அம்னோ உறுப்பினர்கள் சிலரையும் அங்கு காண முடிந்தது.