பிஎன் அரசாங்கம் அமைச்சரவையின் ஒப்புதல் இல்லாமல் 13 தமிழ்ப்பள்ளிகளுக்கு “மர்மமான” ரிம39.7 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்திருந்ததாக கூறப்படும் பிரச்சனை குறித்து முன்னாள் துணைக் கல்வி அமைச்சர் பி. கமலநாதன் இன்று எதிர்வினையாற்றினார்.
ஒதுக்கீடு செய்யப்பட்ட சரியான தொகை ரிம36 மில்லியன். இந்த ஒதுக்கீட்டை பிஎன்-னிடமிருந்து நிருவாகத்தை ஏற்றுக்கொண்ட பக்கத்தான் ஹரப்பான் கவனிக்காமல் விட்டிருக்கலாம் என்று இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கமலநாதன் கூறுகிறார்.
இந்த நிதி ஒதுக்கீட்டை செடிக் அமைப்பு அப்போது அதிகாரத்திலிருந்த நஜிப் ரசாக்கிடம் கோரியிருந்தது என்று அவர் மேலும் விளக்கம் அளித்தார்.
செடிக்கின் கோரிக்கையை பரிசீலித்த பின்னர், மேல்நடவடிக்கை எடுப்பதற்காக ஆகஸ்ட் 9, 2017 இல் நஜிப் கருவூலத்தின் முன்னாள் தலைமைச் செயலாளர் இர்வான் செரிகருக்கு கடிதம் எழுதினார்.
வழக்கமாக, இது போன்ற விவகாரங்களுக்கு பிரதமர் ஒப்புதல் அளித்தால், அந்த ஆலோசனைகளை தெளிவுபடுத்தி மெய்ப்பிக்கும் பொறுப்பு பிரதமர் இலாகா மற்றும் நிதி அமைச்சு ஆகியவற்றை சார்ந்ததாகும். அங்கு கிடைக்கக்கூடிய நிதியைக் கொண்டு இறுதி முடிவு எடுக்கப்படும்.
14-ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பதவி ஏற்ற ஹரப்பான் அரசாங்கத்தின் பிரதமர் இலாகா மற்றும் புதிய கருவூல தலைமைச் செயலாளர் நிதி ஒதுக்கீட்டிற்கு அளிக்கப்பட்டிருந்த ஒப்புதலைக் கவனிக்காமல் இருந்திருக்கலாம் என்றார் கமலநாதன்.
அவரைப் பொறுத்த வரையில், தமிழ்ப்பள்ளிகளின் கட்டமைப்பு மேம்பாடு குறித்து உண்மையிலேயே அக்கறை கொண்டிருந்த ஒரே பிரதமர் நஜிப் மட்டுமே.
அவரது நிருவாகத்தின்கீழ், 2009 லிருந்து 2018 ஆண்டுகளுக்கிடையில், கிட்டத்தட்ட ரிம900 மில்லியன் 524 தமிழ்ப்பள்ளிகளுக்கு ஒதுக்கப்பட்டது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
நேற்று, கல்வி அமைச்சர் மஸ்லி மாலிக் பாரிசான் அரசாங்கம் பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு அளிக்க வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால் அவை பள்ளிகளைச் சென்றடையவில்லை. அதற்கு நஜிப் பதில் கூற வேண்டும் என்று கூறியிருந்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை, தமிழ்ப்பள்ளிகளுக்கு அமைச்சரவையின் ஒப்புதல் இல்லாமலே நிதி அளிக்க வாக்குறுதி அளிக்கப்பட்டது என்றும், அவற்றுக்கான மாதிரி காசோலைகளை வழங்குவதற்காக பிஎன் நிகழ்ச்சிகளை நடத்தியது என்றும் கல்வி அமைச்சு வட்டாரம் கூறிக்கொண்டதை மலேசியாகினி வெளியிட்டது.
திரு. கமலநாதன் அவர்களே, முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் அவர்கள் தமிழ்ப் பள்ளிகளுக்கு நிறைய நிதி கொடுத்திருக்கலாம். ஆனால் அந்நிதி பள்ளி வாரியங்களால் எப்படி பயன்படுத்தப்பட்டது தெரியுமா?