பெர்சே: மலேசியர்கள் ஏன் பிஎன்னைத் தோற்கடித்தார்கள் என்பதை மகாதிரும் ஹரப்பானும் மறக்கக் கூடாது

கடந்த பொதுத் தேர்தலில் மலேசியர்கள் பிஎன்னை ஆட்சியிலிருந்து வெளியேற்றியது பரவலான கட்சித் தாவலைப் பார்ப்பதற்காக அல்ல என்று பெர்சே கூறுகிறது.

கட்சித் தாவல் பதவிக்காகவும் சுயநலத்துக்காகவும்தான் என்பது தெளிவு.

சட்ட நடவடிக்கையிலிருந்து தப்பிப்பதற்காகக்கூட கட்சித் தாவக் கூடும்.

இன்று பிற்பகல் விடுத்த அறிக்கையில் பெர்சே, அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெர்சத்துவுக்குத் தாவுவது குறித்து கவலை கொள்வதாகக் கூறிற்று.

“எம்பிகளின் இச்செயல் எந்தக் கட்சி சார்பில் அவர்கள் போட்டியிட்டார்களோ அக்கட்சிக்காக அவர்களைத் தேர்ந்தெடுத்து நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைத்த வாக்காளர்களுக்கு இழைக்கும் துரோகமாகும்.

“அம்னோ போன்ற தோற்றுப்போன கட்சிகளின் எம்பிகள் எதிரணியில் இருந்து தங்களுக்குரிய பணியைச் செய்யாது ஆளும் கட்சிக்கு எளிதாகத் தாவி அரசாங்கத்தில் இருந்துகொண்டு அதன் அனுகூலங்களை அனுபவிக்க முயல்வது ஜனநாயகத்தைக் கேலிக் கூத்தாக்குகிறது”, என்று அது கூறியது.

பெர்சத்துவுக்குத் தாவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முந்தைய அரசில் அதிகார மீறல்களிலும் ஊழல்களிலும் ஈடுப்பட்டிருந்தால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமா என்றும் பெர்சே வினவியது.