நஜிப் விசாரணையின் நேரடி ஒளிபரப்பு கோரிக்கையை அமைச்சர் நிராகரித்தார்

முன்னாள் பிரதமர் நஜிப் இரசாக்கிற்கு எதிரான வழக்கு விசாரணைகளை, அரசாங்கத் தொலைக்காட்சி நிலையங்கள் நேரடி ஒளிபரப்பு செய்யாது என்று தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.

ஆர்.டி.எம். மற்றும் பெர்னாமாவில் வரையறுக்கப்பட்ட ஒளிபரப்புகளே உள்ளன என்றும் அவர் சொன்னார்.

“இது போன்ற கேள்விகள் என்னிடம் இதற்கு முன்னரும் கேட்கப்பட்டுள்ளன. நஜிப்பின் வழக்கு விசாரணைகளை நேரடியாக ஒளிபரப்பு செய்ய முடியாது என்று நான் முன்னரே கூறியுள்ளேன். ஆர்.டி.எம்.-இல் வரையறுக்கப்பட்ட ஒளிபரப்புகளே உள்ளன, பெர்னாமாவும் அப்படிதான்.

“நாட்டில் விவாதிக்கப்பட வேண்டிய பல பிரச்சினைகள் உள்ளன, அந்த விசாரணையின் செய்தி அறிக்கைகள் எப்பொழுதும் ஒளிபரப்பப்படுகின்றன,” என்று அவர் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

நேற்று, வழக்கறிஞர் முஹம்மட் ஷாஃபி அப்துல்லா, நம்பிக்கை இழப்பு மற்றும் பணமோசடி போன்ற நஜிப்பின் குற்றவியல் வழக்குகளை நேரடியாக ஒளிபரப்புவது ஒரு சிறந்த யோசனை என்று கூறியிருந்தார்.

வழக்கு விசாரணை வெளிப்படையான முறையில் நடத்தப்படுவதை உறுதிசெய்ய, விசாரணையை நேரடி ஒளிபரப்பு செய்வதில் அவருக்கு எந்தவொரு பிரச்சினையும் இல்லை என்று நஜிப்பைப் பிரதிநிதிக்கும் முஹம்மட் ஷாஃபீ கூறினார்.