நான் இறந்திருக்க வேண்டிய ஆள், டாக்டர் மகாதீர்

பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட், இந்த வயதில், முந்தைய அரசாங்கம் விட்டுச்சென்ற பல பிரச்சனைகளைக் கையாள்வதில் தான் சோர்வடைந்துள்ளதை ஒப்புக் கொண்டார்.

புத்ராஜெயாவிலுள்ள, பெர்டானா லீடர்ஷிப் ஃபவுண்டேஷனில், ஏஃப்பி உடனான ஒரு நேர்காணலில், 93 வயதான அவர், “இது நான் இறந்திருக்க வேண்டிய நேரம்,” என்றார்.

சீனாவுடனான மறு பேச்சுவார்த்தை உடன்படிக்கை, முந்தைய அரசாங்கம் விட்டுச்சென்ற தேசியக் கடன்கள் போன்றவை, தற்போது புதிய அரசாங்கம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்கள் என மகாதிர் கூறினார்.

“முன்பு பிரதமராக இருந்ததை விட, இப்போது அதிக வேலைகள் செய்ய வேண்டியுள்ளது, அரசாங்க இயந்திரம் கிட்டத்தட்ட அழிக்கப்பட்டுவிட்டது,” என்று அவர் கூறினார்.

1981 முதல் 2003 வரை பிரதமராக இருந்த மகாதீர், கடந்த மே 9, 14-வது பொதுத் தேர்தலில், பக்காத்தான் ஹராப்பான் வென்றதை அடுத்து, மீண்டும் நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பாரிசான் நேசனல் அரசாங்கம் வீழ்வதற்கு, முன்னாள் பிரதமர் நஜிப்புடன் தொடர்புப்படுத்தப்பட்ட 1எம்டிபி ஊழல் ஒரு முக்கியக் காரணம்.

மகாதீரின் மறுபிரவேசம், அரசாங்கத்தில் பல பிரமுகர்களை – தேசிய வங்கியின் ஆளுநர் முதல் அட்டர்னி ஜெனரல் வரை – பதவி விலகலுக்கோ அல்லது வேறு ஒருவரின் நியமனத்திற்கோ உள்ளாக்கியது.

“கடந்த காலங்களில், முன்னாள் அரசாங்கத்தின் கீழ், அரசியலில் ஈடுபட்டிருந்த இவர்களை நான் அகற்ற வேண்டியிருந்தது.

“தேர்தலில் வெற்றிபெறுவதை உறுதி செய்ய, நஜிப் ஒவ்வொரு அரசாங்க நிறுவனத்தையும் பயன்படுத்த முயற்சித்துள்ளார், நஜிப்புக்கு நிறைய வாய்ப்புகள் இருந்தன, பலவற்றை அவர் பாழாக்கிவிட்டார்,” என்று அவர் கூறினார்.

அரசாங்கத்தில் போதிய நிதிவளம் இல்லாததால், சீனாவின் நிதியுதவியுடனான, கிழக்கு கடற்கரை இரயில்வே (ஈ.சி.ஆர்.எல்.) மற்றும் எரிவாயு குழாய் போன்ற மெகா திட்டங்களை இரத்து செய்ய வேண்டி வந்தது என்றும் மகாதிர் கூறினார்.

இத்திட்டங்கள் இரத்து செய்யப்பட்டாலும், சீனாவுடனான மலேசியாவின் உறவுகள் ‘இன்னும் நன்றாகவே உள்ளது’ என்றார் மகாதீர்.

மகாதிர், பிகேஆரின் எதிர்காலத் தலைவரான அன்வார் இப்ராஹிம் உடனான தனது உறவைப் பற்றியும் கருத்து தெரிவித்திருந்தார். அவர்களுக்கு இடையே நல்ல உறவு இல்லை எனும் குற்றச்சாட்டுகளை மறுத்த மகாதீர், “நான் இதற்கு முன்னர் அவருடன் பணிபுரிந்திருக்கிறேன், எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை, என்னால் அனைவருடனும் வேலை செய்ய முடியும்,” என்றார்.

இதற்கிடையே, வயது கூடிக்கொண்டே போகும் நிலையில், பதவி விலகுவதைத் தவிர வேறு வழி இல்லை என்பதையும் மகாதீர் ஒப்புக் கொண்டார்.

“நான் வாக்குறுதி அளித்துள்ளேன், அவ்வாக்குறுதியை நிறைவேற்றுவேன்,” என்று பிரதமர் பதவியை அன்வாரிடம் வழங்குவதற்கான வாக்குறுதியுடன் ஒத்துப் போவதாக அவர் குறிப்பிட்டார்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பின், மகாதீர் பிரதமர் பதவியிலிருந்து விலகி, நாட்டின் எட்டாவது பிரதமராக பதவியேற்க அன்வாருக்கு வழிவிடுவார் என்று, தேர்தலுக்கு முன்னர், பக்காத்தான் ஹராப்பான் கூறியிருந்தது.

இருப்பினும், மகாதிர் அப்பதவியில் நீடிக்கவுள்ளதாக பல முறை கூறியிருந்தார்.

இதற்கிடையே, அன்வார் பிரதமராகப் பதவியேற்பதைத் தடுக்கும் சதிதிட்டங்கள் நடப்பதாகக் கூறப்படுவதை, இவ்வாரத் தொடக்கத்தில், அன்வார் மறுத்திருந்தார்.