பதின்ம வயதினருக்கு இரவுநேர ஊரடங்கு: கிளந்தான் அமனா, அம்னோ வரவேற்பு

கிளந்தான் அமனாவும் புத்ரி அம்னோவும் மாநில அரசு பதின்ம வயதினருக்கு இரவு நேர ஊரடங்கு விதிக்க உத்தேசித்திருப்பதை வரவேற்கின்றன.

பதின்ம வயதினர் தீயவர்களின் செல்வாக்குக்கு எளிதில் ஆட்பட்டு அதன்வழி நாட்டில் குற்றச்செயல் பெருகுவதற்கும் காரணமாகிறார்கள் என மாநில அமனா இளைஞர் தலைவர் ஹஸ்மி ஹசான் கூறினார்.

“போதைப் பொருள் பழக்கம், சட்டவிரோத வாகனப் போட்டிகள், பாலியல் குற்றங்கள் போன்றவற்றில் அவர்கள் ஈடுபடுகிறார்கள்.

“இப்பரிந்துரை அரைகுறையாக நின்றுவிடாமல் முழுமையாக அமல்படுத்தப்பட வேண்டும்”, என்றவர் விருப்பம் தெரிவித்தார்.

கிளந்தான் சட்டமன்றத்தில் மாநில நலவளர்ச்சி, குடும்ப, மகளிர் மேம்பாட்டுக் குழுத் தலைவர் மும்தாஸ் முகம்மட் நாவி 2019 கிளந்தான் பட்ஜெட் மீதான விவாதத்தை முடித்து வைத்துப் பேசியபோது அப்பரிந்துரையை முன்மொழிந்தார்.

கிளந்தான் அம்னோ புத்ரி தகவல் தலைவர் நஜிஹா யாசிமும் பதின்ம வயதினரின் இரவுநேர நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதை வரவேற்றார்.

அதே வேளையில் பதின்ம வயதினர் இரவு நேரங்களில் பொழுதுபோக்க விளையாட்டுகள், அறிவு வளர்ச்சியை ஊக்குவிக்கும் நிகழ்வுகள் போன்றவற்றை மாநில அரசு உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்றவர் கேட்டுக்கொண்டார்.

இரவு நேரத்தில் சிறார்களை வீடுகளிலேயே நிறுத்தி வைக்கும் யோசனை ஒன்றும் புதிதல்ல.

2017-இல் ஜோகூர் பாருவில் அதிகாலை மூன்று மணிக்கு நெடுஞ்சாலையில்
கூட்டமாகச் சென்ற சைக்கிளோட்டிகள்மீது ஒரு கார் மோதி பதின்ம வயதினர் எண்மர் பரிதாபமாக இறந்த சம்பவத்தை அடுத்து அப்பரிந்துரை முதன் முதலாக முன்வைக்கப்பட்டது.

அமெரிக்காவில் 500 மாநகர்களில் பதின்ம வயதினருக்கு இரவுநேர ஊரடங்கு அமலில் உள்ளது. பெரும்பாலான நகரங்களில் 18வயதுக்குக் குறைந்தவர்கள் வார நாள்களில் இரவு 11 மணிக்குப் பின்னரும் வார இறுதியில் நள்ளிரவுக்குப் பின்னரும் சாலைகளில் நடமாடுவது தடுக்கப்பட்டுள்ளது.

லாஸ் எஞ்சலிஸ் உள்பட சுமார் 100 நகரங்களில் பள்ளி நேரத்தில் பதின்ம வயதினர் சாலைகளில் சுற்றித் திரிவதைத் தடுக்க பகல்நேர ஊரடங்கும் உள்ளது.

தாய்லாந்திலும் சிங்கப்பூரிலும் இரவு மணி 11க்குப் பின்னர் சாலைகளில் சுற்றித்திரியும் பதின்ம வயதினரின் பெற்றோருக்கு போலீசார் எச்சரிக்கைக் கடிதங்களை அனுப்பி வைப்பார்கள்.