பிஎம்ஓ கொடுத்த பணத்தில் ரிம 5மில்லியனைக் காணோம்; ரிம6.4மி. ஜிஇ14க்குக்குச் செலவிடப்பட்டது- டிபிஎம்எம் எக்ஸ்கோ

மலேசிய மலாய் வர்த்தகச் சங்க(டிபிஎம்எம்)த்தில் பிரச்னை. அதன் தலைவர் ரிசால் ஃபாரிஸ் மொகிதின் அப்துல் காடிரின் நடவடிக்கைகளில் சந்தேகம் எழுவதால் துணைத் தலைவர் சைட் உசேன் அல்ஹாப்ஷியும் 17 நிர்வாக மன்ற உறுப்பினர்களும் அவசரக் கூட்டமொன்றை நடத்த விரும்புகிறார்கள்.

சந்தேகத்தை ஏற்படுத்தும் விசயங்களில் ஒன்று நஜிப் அப்துல் ரசாக் பிரதமராக இருந்தபோது பிரதமர் அலுவலகம் கொடுத்த பணம் சம்பந்தப்பட்டது. டிபிஎம்எம்-முக்குக் கொடுக்கப்பட்ட ரிம5 மில்லியன் அதன் கணக்கில் போடப்படாமல் யாயாசான் டிபிஎம்எம் பூலாவ் பினாங் கணக்கில் போடப்பட்டிருக்கிறது.

மற்றொன்று டமான்சாரா சொத்துகள் விற்கப்பட்ட விவகாரம். பிளாசா டமன்சாராவில் இரண்டு சொத்துகள் ரிம11.6 மில்லியனுக்கு விற்கப்பட்டன. அதில் ரிம5.6 மில்லியன் டிபிஎம்எம் கணக்கில் சேர்க்கப்பட்டது.

மற்றொரு ரிம5.4 மில்லியன் நிர்வாக மன்றத்தின் ஒப்புதல் பெறாமலேயே 14வது பொதுத் தேர்தலுக்குச் செலவிடப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் “ ரெட்பெர்ரி” என்ற பெயர் கொண்ட ஒரு நிறுவனம் கொடுத்த ரிம1மில்லியனும் தங்கள் ஒப்புதலின்றித் தேர்தல் பரப்புரைக்குப் பயன்படுத்திக் கொள்ளப்பட்டதாக நிர்வாக மன்றத்தினர் கூறினர்.

ரிசால், டிபிஎம்எம் தலைமைச் செயலாளர் டோன் நஸ்விம் டோன் நஜிப், டிபிஎம்எம் ஆகியோருக்கு எதிராக சைட் உசேனும் 17 நிர்வாக உறுப்பினர்களும் தொடுத்துள்ள வழக்கில் இவ்விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.