பிகேஆர் தேர்தல் | பிகேஆர் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் ரஃபிஸி ரம்லி, சபா, கெனிங்காவில் இன்று மதியம் தாக்கப்பட்டார்.
இன்று மாலை 4 மணியளவில், வாக்களிப்பு மையத்தை விட்டு வெளியேறியபோது, ஓர் ஆடவர் தன்னைத் தலையில் தாக்கியதாக ரஃபிஸி மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
“ஒரு குழுவினர் என்னை சுற்றி வளைத்தனர், அதில் ஒருவர் என்னைத் தலையில் தாக்கினார், ஆனால் காயம் ஏற்படவில்லை.
“இந்தச் சம்பவம் அனைவருக்கும் முன்னால் நடந்தது, அங்குப் போலீசாரும் இருந்தனர். இதுகுறித்து நான் போலிஸ் புகார் செய்வேன்,” என ரஃபிஸி கூறினார்.
கெனிங்காவில், வாக்களிப்பு நிறைவடையும் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக, தேர்தல் இரத்து செய்யப்பட்டது. இதனால், காலை முதல் காத்திருந்த கட்சி உறுப்பினர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது என்று ரஃபிஸி சொன்னார்.
“அவர்கள் கடைசி நிமிடத்தில் வாக்களிப்பை இரத்து செய்ய முடிவு செய்தனர்,” என்று அவர் கூறினார்.
பிகேஆர் தேர்தல் குழு (ஜேபிபி) தலைவர், ரஷீட் டின்-ஐத் தொடர்பு கொண்ட போது, கெனிங்காவில் வாக்களிப்பு இரத்து செய்யப்பட்டுள்ளதை அவர் மறுத்தார்.
“வாக்களிப்பு இரத்து செய்யப்படவில்லை, அது தொடர்ந்து நடைபெறுகிறது. அனைவரும் வாக்களிக்கும் வரை வாக்கெடுப்பு திறந்திருக்கும்,” என்றார் அவர்.
ரஃபிஸி ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்
ரஃபிஸி வாக்குச் சாவடியில் நுழைந்து, ஜேபிபி ‘அதிகாரிகளை’ தூண்டிவிட்டதனால்தான் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது எனக் கெனிங்காவ் பிகேஆர் தலைவர் ஜொஹாரி தாஹிர் தெரிவித்தார்.
ராஃபிஸின் ஆதரவாளர்கள்தான் கலகத்தை ஆரம்பித்ததாக ஜோஹரி கூறினார்.
மண்டபத்தில் நுழைய, குறிப்பிட்ட சில வாக்காளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர், அதைப்பற்றி தான் அதிகாரிகளிடம் விசாரித்ததாக ரஃபிசி விளக்கினார்.