பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தின் முதல் வரவு செலவு திட்டமான, 2019-ஆம் ஆண்டின் பட்ஜெட்டை அனைத்து விமர்சனங்களில் இருந்தும் அரசாங்கம் தற்காக்கும் எனப் பிரதமர் துன் டாக்டர் மகாதிர் முகமட் கூறியுள்ளார்.
குறிப்பிட்ட சில தரப்பினரின் ஆரம்ப எதிர்பார்ப்புகள் வேறுமாதிரியாக இருந்தபோதும், அடிப்படையில் ஒதுக்கப்பட்ட வரவு செலவு திட்டம் மிக அதிகமாக இருக்கிறது என ஹரப்பானின் தலைவருமான டாக்டர் மகாதிர் கூறினார்.
“அரசாங்கம் எதிர்நோக்கும் நிதி பிரச்சினைகள் காரணமாக, 2019 வரவு செலவுத் திட்டம் சிறியதாக இருக்கிறது எனப் பலர் நினைக்கிறார்கள்.
“மாறாக, நம்மால் ஒதுக்கப்பட்ட தொகையை அதிகரிக்க முடியும், இந்த வரவு செலவுத் திட்டத்தை எந்தவொரு விமர்சனங்களில் இருந்தும் தற்காக்க நாங்கள் ஒத்துழைப்போம்,” என, இன்று புத்ராஜெயாவில், பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் உடனான கூட்டத்திற்குப் பின்னர், செய்தியாளர் மாநாட்டில் அவர் தெரிவித்தார்.
நேற்று, நிதி அமைச்சர் லிம் குவான் எங் தாக்கல் செய்த 2019 பட்ஜெட்டில் RM314.5 பில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2018 பட்ஜெட்டுடன் (RM290.4 பில்லியன்) ஒப்பிடும்போது, இது அதிகம். இதில், RM259.8 பில்லியன் நிர்வாகச் செலவுகளுக்கும் RM54.7 பில்லியன் மேம்பாட்டுச் செலவுகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
2019 பட்ஜெட்டைப் பலரும் வரவேற்றுள்ளதாக டாக்டர் மகாதிர் தெரிவித்தார்.
அரசாங்கம் நிதிப் பிரச்சனைகளை எதிர்நோக்கியிருக்கும் இவ்வேளையிலும், மக்களின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் எனும் நோக்கத்திற்காக, 2019 வரவு செலவு திட்டங்களை அமல்படுத்த பெட்ரோனாஸ்-இடமிருந்து RM30 பில்லியன் உதவிநிதியைப் பெறவுள்ளதாகவும் அவர் சொன்னார்.
“RM30 பில்லியன் பெரியதாக இருப்பினும், நாடு தற்போது RM1 டிரில்லியன் அல்லது RM1,000 பில்லியன் கடனை எதிர்நோக்கியுள்ளது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும், நீண்டகாலத்திற்கு நாம் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சனை இது.
“இருப்பினும், இக்கடன் பிரச்சினைகளில் சிலவற்றை எப்படிக் கையாள்வது, அதேவேளை வரவு செலவுத் திட்டத்தில் மக்களின் தேவைகளை எவ்வாறு பூர்த்தி செய்வது என்பது பற்றியும் நாங்கள் விவாதித்தோம்,” என்றார் அவர்.
அதன் அடிப்படையில், புத்ராஜெயா சர்வதேச மாநாட்டு மையத்தில் (பி.ஐ.சி.சி), டிசம்பர் 9-ம் தேதி, கட்சியை நிர்வகிக்க நிதி திரட்டுவதற்காக பக்காத்தான் ஹராப்பான் ஒரு விருந்தை ஏற்பாடு செய்யவுள்ளதாகவும் டாக்டர் மகாதிர் கூறினார்.
இவ்விருந்து நிகழ்ச்சிக்கு மேசைகளை வாங்கி, பண உதவி செய்யும் எத்தரப்பினருக்கும் அரசாங்கத்தின் சிறப்பு உபசரிப்போ அல்லது சலுகைகளோ கிடைக்காது என்றும் மகாதிர் உறுதியாகக் கூறினார்.
“ஒரு குறிப்பிட்ட நிறுவனம் அல்லது தொழிலதிபரின் தாக்குதலுக்கு ஆளாகாமல் இருக்க, நன்கொடை வழங்கும் யாருக்கும் சிறப்பு உபசரிப்பு கிடையாது.
“இந்த நிகழ்ச்சியில் எவரும் நன்கொடை வழங்கலாம், அரசாங்க விவகாரங்களில் இவர்களால் எந்தவிதமான பாதிப்பும் இருக்காது,” என்றார் அவர்.