‘முந்தைய அரசாங்கத்தின் தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்’ பேராக் சுல்தான் ஹராப்பானுக்கு நினைவூட்டல்

“முந்தைய அரசாங்க நிர்வாகத்தின் தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள், அதிகாரத் துஸ்பிரயோகம் செய்யும் தலைவர்களைத் தூக்கியெறிய மக்கள் தயங்கமாட்டார்கள்,” என பேராக் சுல்தான், சுல்தான் நஸ்ரின் ஷா ஹராப்பான் அரசாங்கத்திற்கு இன்று நினைவுறுத்தினார்.

தனிப்பட்ட இலாபத்திற்காகப் பதவியைப் பயன்படுத்தும் தலைவர்களை அம்பலப்படுத்த, குடும்ப உறுப்பினர்களுக்குச் செல்வம் குவிக்கும் அல்லது வர்த்தகர்களுக்கு ஒரு கருவியாக செயல்படும் தலைவர்களை நிராகரிக்க, மக்கள் தயாராக இருக்கிறார்கள் என்று நஸ்ரின் ஷா கூறினார்.

இன்று, கோலகங்சாரில், தனது 62-வது பிறந்தநாளை ஒட்டி, இஸ்கண்டாரியா அரண்மனையில் நடந்த விருதளிப்பு வைபவத்தில் அவர் இவ்வாறு பேசினார். அவருடன், பேராக் ராஜா பெர்மாய்சூரி துவான்கு ஸாரா சலிம்-உம் இருந்தார்.

61 ஆண்டுகால சுதந்திர நாட்டில், மக்கள் புதிய அரசியல் கலாச்சாரம், புதிய அரசியல் சூழலை கோருவதாக சுல்தான் நஸ்ரின் தெரிவித்தார்.

நாட்டின் வளம் சமமான முறையில் விநியோகிக்கப்படுவதையும், பாதுகாப்பான வேலை வாய்ப்பு, சிறந்த வாழ்க்கைத் தரம், வெளிப்படையான ஆட்சி, நம்பகமான தலைவர் போன்றவற்றை மக்கள் கனவு காண்பதாக அவர் கூறினார்.

“பாலினச் சமத்துவம், இனச் சமத்துவம், மத சமத்துவம், பிராந்திய சமத்துவம் ஆகியவற்றை மதிக்கும் ஓர் அரசாங்கத்தை மக்கள் கனவு காண்கிறார்கள்,” என்று அவர் கூறினார்.

“மக்கள் குழப்பம் மற்றும் சச்சரவுகளிலிருந்து விடுபட்ட ஒரு தேசத்தைக் காண விரும்புகின்றனர், மத நம்பிக்கை, பரஸ்பர மரியாதை மற்றும் ஒத்துழைப்போடு வாழ, மத பாரபட்சங்கள் மற்றும் இன முரண்பாடுகளால் பிரிக்கப்படாமல் இருக்க மக்கள் விரும்புகின்றனர்,” என்று அவர் கூறினார்.

-பெர்னாமா