பிடிபிடிஎன் : கடனைத் திருப்பிச் செலுத்த சிறந்த வழிகாண, கடனாளிகளுடன் பேச வேண்டும்

பிடிபிடிஎன் கடனைத் திருப்பிச் செலுத்துவது குறித்து அறிவிக்கப்பட்ட நடவடிக்கையால் ஏமாற்றமடைந்த, டேவான் நெகாரா செனட்டர் யூஸ்மடி யூசுஃப், இந்தச் சிக்களுக்குச் சிறந்த தீர்வைக் கண்டுபிடிக்க, அரசாங்கம் கடனாளிகளுடன் கலந்துபேச வேண்டும் என்றார்.

கடன் வாங்கியவர்களின் கருத்துக்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், அரசாங்கம் செயல்படுகிறது என்று அவர் விவரித்தார்.

“அரசாங்கம் இதற்கான வழியைத் தனியாகக் காணமுடியாது, கூட்டாக செயல்பட்டே தீர்வு காணமுடியும், மாணவர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இது சாத்தியமல்ல,” என்று அவர் மலேசியாகினி-இடம் தெரிவித்தார்.

RM1,000 மேல் சம்பாதிக்கும் கடனாளிகளிடமிருந்து 2 முதல் 15 விழுக்காடு, மாதச் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்வது பற்றிய அரசாங்கத்தின் அறிவிப்பையொட்டி அவர் கருத்து தெரிவித்தார்.

14-வது பொதுத் தேர்தலில், பக்காத்தான் ஹராப்பான் கொடுத்த வாக்குறுதிக்கு எதிராக இது இருக்கிறது, குறைந்தபட்சம் RM4,000 மாதச் சம்பளத்தைப் பெற்ற பிறகு, கடனைச் செலுத்தினால் போதும் என்று தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தை, அரசாங்கம் மறுபரிசீலனைச் செய்ய வேண்டுமென யூஸ்மடி அரசை வலியுறுத்தியுள்ளார்.