2019 பட்ஜெட் | மலேசிய சோசலிசக் கட்சியின் (பி.எஸ்.எம்.) தலைமைச் செயலாளர் சிவராஜன் ஆறுமுகம், 2019 வரவு செலவுத் திட்டத்தின் கீழ், B40 குழுவினர் பயனடையும் வகையில், கடுமையான வியாதிகளுக்கு RM8,000 வரையில் இலவச மருத்துவத்திற்கான காப்புறுதி திட்டத்தை வழங்கும், புதிய அரசாங்கத்தின் முடிவை வரவேற்பதாகக் கூறியுள்ளார்.
இருப்பினும், நடப்பு மருத்துவமனை விதிமுறைகள், நோயாளிகள் இந்தச் சேவையைப் பயன்படுத்திக்கொள்வதிலிருந்து விலக்கிச் செல்லும் சாத்தியமும் உண்டு என்று பி.எஸ்.எம். கவலை கொண்டுள்ளது என்றார்.
RM8,000 காப்பீட்டுத் தொகை வரம்பை, ஒரு தனியார் மருத்துவமனையில் மிக விரைவில் அடைந்துவிட முடியும், அதன் பின்னர் B40 குழுவினர் பல சிரமங்களுக்கிடையே மீண்டும் பொது மருத்துவமனைகளுக்கே இடமாற்றம் செய்வதற்கு இது இடமளிக்கக்கூடும் என்றார் அவர்.
“ஒரு நோயாளி RM8,000 தொகை வரம்பை அடைந்ததும், தனியார் மருத்துவமனையில் தங்கள் பாக்கெட்டிலிருந்து பணம் செலுத்த முடியாமல் போனால், அவர்கள் அரசாங்க மருத்துவமனைக்குப் பரிந்துரைக்கப்படுவார்கள்.
“ஆனால், தற்போதையக் கட்டணங்கள் சட்டம் 1951, தனியார் மருத்துவமனைகளில் இருந்து வெளியேற்றப்பட்டு, அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளிடம் முதல் வகுப்பு விகிதத்தில் கட்டணம் வசூலிக்க வகை செய்கிறது.
“வழக்கமான கட்டணத்தை விட இது பல மடங்கு அதிகமாக இருக்கும், எனவே காப்பீட்டால் பாதுகாக்கப்படுபவர்களுக்குப் பின்னர் அரசு மருத்துவமனைகளில் முதல் வகுப்பு விகிதத்தில், அதிகக் கட்டணங்கள் மூலம் அவஸ்தையே ஏற்படும்,” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எனவே, இதுபோன்ற பரிந்துரைகளை மறுபரிசீலனைச் செய்ய வேண்டுமென சிவராஜன் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
புத்ராஜெயா சுகாதாரத்துறைக்கு ஒதுக்கியுள்ளது 7.8 விழுக்காட்டில், பொது மருத்துவமனைகள் எதிர்நோக்கும் இடநெருக்கடி பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண, அரசாங்கம் புதிய மருத்துவமனைகளை நிர்மாணிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
பரிந்துரைக்குக் கீழான குறைந்தபட்ச சம்பளம்
அடுத்த ஆண்டு தொடக்கம் அமலாக்கம் காணவுள்ள புதிய குறைந்தபட்ச ஊதியம் ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டதைவிட RM50 அதிகமானாலும், அது தேசிய ஊதிய தொழில்நுட்பக் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட RM1,170 ஐ விடக் குறைவானதே என்று சிவராஜன் தெரிவித்தார்.
உள்ளூர் பொருட்களின் கொள்முதலை ஊக்குவிக்கும் அரசாங்கத்தின் பிரச்சாரத்தைப் பி.எஸ்.எம். பாராட்டுகிறது, அதேசமயம், போதிய ஊதியம் இல்லாத மன அழுத்தத்தால், இப்பிரச்சார நோக்கத்தை அடைவது கடினமாக இருக்கலாம் என சிவராஜன் கூறினார்.
அரசாங்க நிலத்தில், மக்களுக்குப் பயனளிக்கும் திட்டங்கள்
நேரடி பேச்சுவார்த்தைக்குப் பதிலாக திறந்த தெண்டர்கள் மூலம், அரசாங்க நிலத்தை விற்பனை செய்வது குறித்து கருத்துரைக்கையில், அந்த நிலங்களை விற்பனை செய்யாமல், மக்களுக்குப் பயனளிக்கும் வகையில், மலிவு வீடுகள் கட்டுதல் போன்ற நோக்கங்களுக்காகப் பயன்படுத்தலாம் என்று அவர் கூறினார்.
வீடுகளின் விலைகள் உயர்த்தப்பட்டால், வீடு வாங்குவோருக்கு அரசாங்கம் வழங்கும் நிதி உதவிகள் பயனளிக்காது என்றும் அவர் மேலும் கூறினார்.
அதோடுமட்டுமின்றி, பூர்வக்குடியினரின் பாரம்பரிய நில உரிமைகளையும் அங்கீகரிக்க வேண்டுமென சிவராஜன் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.