RM263 மில்லியன் இலஞ்சம் தொடர்பான 35 ஊழல் குற்றச்சாட்டுகளை மூசா எதிர்கொள்கிறார்

சபா முன்னாள் முதலமைச்சர் மூசா அமானுக்கு எதிராக, RM263 மில்லியன் பெறுமதியானக் கட்டுமரக் குத்தகை ஒப்பந்தம் தொடர்புடைய 35 ஊழல் குற்றச்சாட்டுக்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) பதிவு செய்துள்ளது.

2004 மற்றும் 2008-ஆம் ஆண்டுகளுக்கு இடையில், பினாமிகள் வழியாக ஹாங்காங்கிலும் சிங்கப்பூரிலும் மூசா அச்செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

அனைத்துக் குற்றச்சாட்டுக்களும் 1997-ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவு (11 ஏ) கீழ், ஏஜெண்ட் மூலமாக வழங்குவது அல்லது பெறுவதற்கான குற்றத்தைக் குறிக்கிறது.

அந்த 35 குற்றச்சாட்டுகளில், சியா தியான் ஃபோ என்பவரின் பெயர் 16 முறை குறிப்பிடப்பட்டுள்ளது. சியா, அல்லது மைக்கேல் சியா என அழைக்கப்படும் நபர் மூசாவிற்கு அறிமுகமானவர்.

குற்றவாளி என உறுதிசெய்யப்பட்டால், 14 நாட்கள் முதல் 20 ஆண்டுகள் வரை சிறையும் ஒவ்வொரு இலஞ்சக் குற்றத்திற்கும், இலஞ்ச மதிப்பில் ஐந்து மடங்கு அபராதமும் விதிக்கப்படலாம்.