செய்தியாளர் கசோகியைக் கொலை செய்தவர்கள் மீது குற்றம் சாட்டப்படும், சவூதி அரேபியா ஐநாவிடம் கூறுகிறது

 

மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து கொடுத்த அழுத்ததைத் தொடர்ந்து செய்தியாளர் ஜமால் கசோகியின் கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு தொடரப்படும் என்று சவூதி அரேபியா ஐக்கிய நாட்டு மன்றத்திடம் (ஐநா) திங்கட்கிழமை கூறியது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் சவூதி அரேபியாவின் செயல்பாடுகள் பற்றிய ஐநாவின் முதல் ஆய்வுக் கூட்டத்தில் பேசிய சவூதி அரேபிய அரசின் தலைமைப் பிரதிநிதி பண்டார் அல் ஐபான், கொலைகாரர்களை சட்டப்படி நீதியின்முன் நிறுத்துமாறு சவூதி மன்னர் அரச வழக்குரைஞர்களுக்கு உத்தரவிட்டிருப்பதாகக் கூறினார்.

எங்கள் குடிமகன் காலமானது குறித்து, எங்கள் நாடு நியாயமான விசாரணையை மேற்கொள்ளும். அக்குற்றத்தில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐபான் கூறினார்.

இக்கொலை சம்பந்தமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள 18 சவூதி குடிமகன்கள் எங்கு இருக்கிறார்கள் என்பது பற்றிய எந்தத் தகவலையும் ஐபான் அளிக்கவில்லை.

அது பற்றி செய்தியாளர்கள் தொடர்ந்து எழுப்பிய கேள்விகளுக்கு அவர் தொடர்ந்து பதில் அளிக்க மறுத்தார். “இந்த வழக்கு இன்னும் விசாரணையில் இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். எனது அறிக்கை மிகத் தெளிவானது” என்று ஐபான் மேலும் கூறினார்.