பகாங், பெந்தோங்கில் 48 இந்தியக் குடிமக்களை கட்டாயப்படுத்தி வேலைக்கு அமர்த்தியதாகக் குற்றம்சாட்டப்பட்ட முதலாளி கைது செய்யப்பட்டுள்ளார். தமது தொழிலாளர்கள் தப்பி ஓடி விட்டனர் என்று போலீஸ் புகார் செய்ய பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.
இது குறித்த தகவலை போலீஸ் வழங்கியதாக தொழிலாளர் இலாகா ஓர் அறிக்கையில் தெரிவித்தது.
இத்தொழிலாளர்களுக்கு தற்காலிகமாக பத்துமலை இந்துக் கோயிலில் அடைக்கலம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த இந்தியத் தொழிலாளர்கள் உதவி கோரி பதிவேற்றம் செய்திருந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவியதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை தொடங்கியது.
பத்துமலையில் சம்பந்தப்பட்ட 48 தொழிலாளர்களிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன. அவ்விடத்தில் மலேசிய சாபாய் சட்டமன்ற உறுப்பினர் டி. காமாட்சி இருந்தார். அங்கு இந்திய ஹைகமிஷனின் பிரதிநிதி ஒருவரும் இருந்தாராம்.
அத்தொழிலாளர்களுக்கு மாதம் ரூபாய் 25,000 சம்பளம் கொடுக்கப்படும் என்று கூறப்பட்டதாக அவர்கள் கூறிக்கொண்டனர். ஆனால், இன்றுவரையில் அவர்கள் ஒரே ஒரு மாதச் சம்பளமே பெற்றுள்ளனர் என்றும் கூறப்பட்டது.
அத்தொழிலாளர்களின் பயணப் பத்திரங்கள்/கடப்பிதழ்கள் ஆகியவற்றை அந்த முதலாளி பிடித்து வைத்துக் கொண்டாத சில தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
இந்த விவகாரம் வேலைச் சட்டம் 1955-இன் கீழ் விசாரிக்கப்படும் என்று தொழிலாளர் இலாகா கூறிற்று.
மேலும், அந்த முதலாளியிடம் போலீஸ் மற்றும் குடிநுழைவுத் துறை சம்பந்தப்பட்ட சட்ட மீறல்களுக்காக விசாரணை மேற்கொள்ளும் என்றும் கூறப்பட்டது.