மலேசிய வணிகக் கட்டுப்பாடுகளைப் புத்ராஜெயா அகற்றும்

மலேசியாவில் வர்த்தகம் செய்வதற்கான அனைத்து தடைகளையும் புத்ராஜெயா அகற்றும் எனப் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் கூறியுள்ளார். குறிப்பாக, வெளிநாட்டு முதலீட்டாளர்களைக் கவர்ந்திழுக்கும் நோக்கில், மலேசியா வர்த்தக-நட்பு அணுகுமுறையைக் கடைப்பிடிக்க உள்ளதாகவும் உறுதியளித்துள்ளார்.

தோக்கியோவில், சுமார் 600 தொழில்முனைவர்கள் முன்னிலையில் பேசிய அவர், தனியார் துறைகள் தடை இல்லாமல் நாட்டில் வியாபாரம் செய்ய, அரசாங்கம் புதிய சட்டவிதிகளை இயற்றும் என்றார்.

“உங்கள் வியாபாரத்தின் வெற்றிக்கு இந்த அரசாங்கம் உதவும், நீங்கள் நம்பிக்கையுடன் இருக்கலாம். நீங்கள் மலேசியாவுக்கு வந்தால், நீங்கள் எங்கள் விருந்தினர், உங்கள் பிரச்சினையை ஆராய்ந்து, அதைத் தீர்க்க நாங்கள் தயாராக உள்ளோம்.

நேற்று தொடக்கம், டாக்டர் மகாதீர், வேலை நிமித்தமாக ஜப்பானுக்கு 3 நாள்கள் பயணம் மேற்கொண்டுள்ளார்.

சுதந்திரமான, நட்பு பாராட்டும், எளிதான அணுகுமுறை

“உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு இடையேப் பாகுபாடுகள் கிடையாது, மலேசியா எப்போதும் வியாபாரம் செய்வதற்கு ஒரு சுதந்திரமான நாடு என அறியப்படுகிறது, மலேசியாவுக்கு வருகை தர வெளிநாட்டு முதலீட்டாளர்கள் விரும்பாத நிலையில் நாங்கள் இல்லை,” என்றார் அவர்.

“வாணிபத்தால் மட்டுமே செல்வத்தை உருவாக்க முடியும்…. அதுமட்டுமின்றி, அரசாங்கத்தால் தனியாக பொருளாதாரத்தை உருவாக்க முடியாது, அதனால்தான் அரசாங்கம் முதலீட்டாளர்களுக்கு உதவத் தயாராக இருக்கிறது,” என்று அவர் கூறினார்.

மலேசியாவில் உயர் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில் நுட்பம் அடிப்படையிலான தொழில்களில் அதிக முதலீடுகள் தேவை என்று பிரதமர் கூறியுள்ளார்.

-பெர்னாமா