அசிசா சரவாக் பிகேஆர் தேர்தல்களுக்கு முன்னதாக சர்ச்சைக்குரிய ஜூலாவுக்குச் சென்றது ஏன்?- லத்தீபா

வரும் சனிக்கிழமை சரவாக்கில் பிகேஆர் தேர்தல்கள் நடைபெறவுள்ள வேளையில் கட்சித் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் அம்மாநிலத்தில் உள்ள ஜூலாவ் சென்றது ஏன் என்று கேட்கிறார் பிகேஆர் உச்சமன்ற உறுப்பினர் லத்தீபா கோயா.

துணைப் பிரதமர் அத்துடன் மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சர் என்ற முறையில் அரசாங்க இயந்திரங்களைப் பயன்படுத்தி அம்மாநிலத்துக்கு மேற்கொண்ட வருகை “முறையற்றது, கேள்விக்குரியது” என்றவர் கூறினார்.

“வான் அசிசா அங்கு செல்ல அவருடைய பதவியையும் அரசாங்கச் சொத்துகளையும் பயன்படுத்திக் கொண்டுள்ளார்.

“ஜூலாவில் ஒரு சாலை அமைக்க ரிம100,000 ஒதுக்கப்படுவதாகவும் அவர் அறிவித்தார்.

“அது ஜாலாவ் தொகுதிக்கும் கட்சியின் மத்திய செயல்குழுவுக்கும் ஒரு வேட்பாளராக போட்டியிடும் லேர்ரி சிங் உடனிருந்தபோது அறிவிக்கப்பட்டுள்ளது”, என லத்தீபா ஓர் அறிக்கையில் கூறினார்.

லேர்ரி, தாம் கட்சித் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் முகம்மட் அஸ்மினை எதிர்த்துப் போட்டியிடும் ரபிசி ரம்லியின் ஆதரவாளர் என்பதை “வெளிப்படையாகவே அறிவித்துள்ளார்” என்றாரவர். லத்தீபாவைப் பொறுத்தவரை அவர் அஸ்மின் ஆதரவாளர் என்பது தெரிந்ததே.

அஸ்மின் ஆதரவாளர்களில் ஒருவரான பிகேஆர் மகளிர் தலைவரும் வீடமைப்பு, ஊராட்சி அமைச்சருமான ஜுரைடா கமருடின் நவம்பர் 5இல் ஜூலாவ் சென்றிருந்தார்.

அது குறித்து லத்தீபாவிடம் கேட்டதற்கு ஜூரைடா மகளிர் தலைவர் என்ற முறையில்தான் அங்கு சென்றார் என்றும் அமைச்சர் என்ற முறையில் அல்ல என்றும் சொன்னார்.

“ஆனால் வான் அசிசாவோ துணைப் பிரதமர் என்ற முறையில் அங்கு சென்றதாகவும் அரசாங்க நிதி ஒதுக்கீடு பற்றி அறிவித்ததாகவும் அவரே டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்”, என்றாரவர்.

பெர்னாமா