2019 பட்ஜெட் : பிடிபிடிஎன் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கிறது, பெமுடா பி.எஸ்.எம். சாடல்

2019 வரவு செலவு திட்டத்தில், கல்வித் துறைக்கான ஒதுக்கீட்டை 59.96 பில்லியனிலிருந்து 60.24 பில்லியனாக உயர்த்தியப் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்திற்கு மலேசிய சோசலிசக் கட்சியின் இளைஞர் பிரிவு (பெமுடா பிஎஸ்எம்) வாழ்த்துகள் தெரிவித்துள்ளது.

இருப்பினும், பிடிபிடிஎன்-னுக்குப் பட்ஜெட்டில் வழங்கப்பட்ட தொகை மிகவும் பிற்போக்குத்தனமானது மட்டுமல்ல, நேரடியாக மக்களின் நிலைப்பாட்டைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாத ஒன்று எனவும் அது சாடியுள்ளது.

“பிடிபிடிஎன் விவகாரத்தில், மாதத்திற்கு RM1000-க்கும் அதிகமாக சம்பாதிக்கும் கடனாளிகளுக்கு 2% முதல் 15% வரை திட்டமிடப்பட்ட விலக்குகள் மூலம், தானாகத் திருப்பிச் செலுத்தும் முறையை அறிமுகப்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

“இதன்வழி, RM1100 குறைந்தபட்ச சம்பளம், மிகவும் குறைவாக இருந்தபோதிலும், பிடிபிடிஎன் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் இருந்து யாரும் விலக்கப்பட போவதில்லை.

“இது, உயர்ந்துவரும் வாழ்க்கைச் செலவினங்களுக்கு மத்தியில், குறைந்த வருமானம் பெறும் மக்களை, குறிப்பாக B40 குழுவினரைப் பெரிதும் பாதிக்கும்,” என்று பெமுடா பிஎஸ்எம், மத்திய செயலவை உறுப்பினர் காந்தீபன் நந்தகோபாலன் கூறியுள்ளார்.

“B40 குழுவினரில் பெரும்பாலானோருக்கு, வாழ்க்கைத் தரத்தை அடைய ஒரு பணியாளருக்குப் பேங்க் நெகாரா பரிந்துரைத்துள்ள குறைந்தபட்ச சம்பளத்தை விட குறைவாகவே வழங்கப்படுகிறது,” என்று கூறிய காந்தீபன், “மலேசியாவில் குறைந்தபட்ச ஊதியம் ஆசிய நாடுகளின் வாங்கும் சக்தியைவிட குறைவாக இருப்பதை நிதியமைச்சர் மறந்துவிடக் கூடாது,” என்றும் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

“ஆக, கடனைத் திருப்பிச் செலுத்தும் இந்த அணுகுமுறை பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் மக்களின் பொருளாதார நிலைமையைக் கணக்கில் கொள்ளவில்லை என்பதையே நிரூபிக்கிறது,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மலேசிய அரசாங்கம் தொழிலாளர்களின் கடன் சமநிலையைத் தீர்க்க உதவும் நிறுவனங்களுக்கான வரி நிவாரணம் பற்றி, இன்னும் ஆழமான விளக்கத்தை வழங்க வேண்டும். இன்றையத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் அழுத்தத்தை, அரசாங்கம் பரிந்துரைத்துள்ள இந்த வழிமுறையால் தீர்க்க முடியாது என்று காந்தீபன் தெரிவித்தார்.

“மிக உயர்ந்த கல்வி கட்டணங்களை விதிக்கும், இலாப நோக்குடைய தனியார் மேற்கல்வி கூடங்களும் (ஐ.பி.டி.எஸ்.) நிதி சிக்கலில் இருக்கும் பொது கல்வி நிறுவனங்களும்தான் (ஐ.பி.டி.ஏ.), இந்த பிடிபிடிஎன் கடன்களுக்கு முக்கியக் காரணங்கள்,” என்றார் அவர்.

“ஐ.பி.டி.எஸ். மற்றும் ஐ.பி.டி.ஏ.-களின் உயர்க் கட்டணத்தைக் கட்டுப்படுத்த அரசாங்கத் தலையீடு தேவை. மலேசிய அரசாங்கம் கடன் கொடுப்பதையும் வட்டியைத் திரும்பப் பெறுவதையும் மையமாகக் கொண்ட ஒரு பெருநிதிநிறுவனமாகச் செயல்படக்கூடாது.

“பாரிசான் நேசனல் அரசாங்கத்திற்குப் பதிலாகப் பொறுப்பேற்றிருக்கும் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம், தொழிலாளர் வர்க்கம் மற்றும் ஓரங்கட்டப்பட்ட பிரிவினருக்கு உதவும் வகையில் கொள்கைகளை உருவாக்க வழிவகுக்க வேண்டும்,” என்று அவர் தெரிவித்தார்.

“ஆசியாவில் மிக அதிகமான குடும்பக் கடன் கொண்ட நாடுகளில் மலேசியாவும் உள்ளது, எனவே அரசாங்கம் தரமான இலவசக் கல்வி போன்ற சமூக ஊதியங்களை வலுப்படுத்த வேண்டும்.

“அதுமட்டுமின்றி, 1 டிரில்லியன் கடன் எனும் சொல்லாடலை அரசாங்கம் முதலில் நிறுத்த வேண்டும். மக்களிடையேப் பாகுபாட்டை ஏற்படுத்தும் நிதி நிலைமை அடிப்படையிலான கல்வி முறையை அகற்றி, அனைத்து மக்களுக்குமான கல்வி வாய்ப்புகளை உறுதிபடுத்த வேண்டும்,” என்றும் அரசாங்கத்தைக் காந்தீபன் வலியுறுத்தியுள்ளார்.

காந்தீபனின் இந்த அறிக்கைக்கு, ‘பார்ட்டி முர்பா’, ‘கோம்ரட் போர்னியோ’, ‘கெராக்கான் பெம்பேபாசான் எகடெமி’, ‘சுவாரா கொலெக்டிஃப் யு.ஐ.எ.’, ‘புக்கு ஜலானான் யு.ஐ.எ.’ ‘நாடி மஹாசிஸ்வா’, ‘லிபராஸி’, ‘மலேசியா முடா’ உள்ளிட்ட 14 அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.