அரசியல் ஆய்வாளர், பேராசிரியர் டாக்டர் ஜெனிரி அமீர், பிகேஆர் துணைத் தலைவர் பதவிக்கு வெற்றிபெறும் வாய்ப்பு, ரஃபிசி ரம்லிக்குப் பிரகாசமாக இருப்பதாகக் கூறியுள்ளார்.
சபாவில், 1,642 வாக்குகள் பெறும்பான்மையில் பின்னுக்கு இருந்தாலும், ஜூலாவ் எம்பி, லேர்ரி சிங் வேய் ஷியேன்-இன் ஆதரவு, ரஃபிசிக்கு அவ்வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் என அவர் சொன்னார்.
“முன்பு, பிகேஆர் ஜூலாவ் தொகுதி உறுப்பினர்கள் எண்ணிக்கை வெறும் 635 மட்டும்தான், ஆனால் தற்போது அவ்வெண்ணிக்கை 13,617 –ஆக உயர்ந்துள்ளது. இது அதிர்ச்சி தரும் ஓர் எண்ணிக்கை ஆகும்.
“அதுமட்டுமின்றி, தற்போது 1,642 வாக்குகள் வித்தியாசத்திலேயே அஸ்மின் முன்னணியில் உள்ளார், இது மிகவும் குறைந்த எண்ணிக்கையே,” என சரவாக் மலேசியப் பல்கலைக்கழ (யூனிமாஸ்) மூத்த விரிவுரையாளரான ஜெனிரி அமீர் கூறியதாக, உத்துசான் ஓன்லைன் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
“இருப்பினும், இறுதி முடிவு சரவாக் பிகேஆர் உறுப்பினர்களின் கைகளில் உள்ளது. அஸ்மின் அவரது முந்தைய சிலாங்கூர் மந்திரி பெசார் எனம் தகுதியின் அடிப்படையில் வெற்றிபெற வாய்ப்புண்டு.
“அதேசமயம், சரவாக்கிலுள்ள அடிமட்ட உறுப்பினர்களிடையேயான நம்பகத்தன்மை மற்றும் புகழ் காரணமாக ரஃபிசி அப்பதவியை வெல்லும் தகுதியைப் பெறுவார்,” என்றும் அவர் கூறினார்.
நவம்பர் 6-ஆம் தேதி வரை, முகமது அஸ்மின் 59,594 வாக்குகள் பெற்றுள்ள நிலையில், ரஃபிசிக்கு 56,392 வாக்குகள் கிடைத்துள்ளன.