2018-ஆம் ஆண்டின் வரவுசெலவுத் திட்டத்தின்போது, பாரிசான் அரசாங்கம் 1மலேசியா பால் திட்டத்தை (பி.எஸ்.1எம்) துணை உணவு திட்டத்தின் (ஆர்.எம்.டி.) கீழ் செயல்படுத்த RM299 மில்லியன் ஒதுக்கீடு செய்தது.
இருப்பினும், கடந்த ஜனவரி முதல், நடைமுறைப்படுத்தி இருக்க வேண்டிய அத்திட்டம் என்னவானது என்று ஓர் ஆண்டு கடந்தும், இன்று வரை தெரியவில்லை.
இதுவரை அத்திட்டத்தின் கீழ், ஏழை மாணவர்களுக்குப் பள்ளிகளில் பி.எஸ்.1எம். பால் கொடுக்கப்படவில்லை எனத் தேசிய ஆசிரியர் சேவை சங்கத்தின் (என்.யூ.தி.பி.) தலைமைச் செயலாளர் ஹேரி தான் ஹுஆட் ஹோக் கூறியுள்ளார்.
“கல்வி அமைச்சிலிருந்து எந்தவொரு அறிவிப்பும் வெளிவராத நிலையில், இந்த நல்ல திட்டம் திடீரென நிறுத்தப்பட்டது எங்களுக்கு அதிர்ச்சியை அளிக்கிறது,” என்றார் அவர்.
“பள்ளிகளில் விசாரித்தபோது, இவ்வாண்டு தொடக்கம் முதல், பி.எஸ்.1எம். பால் பள்ளிகளுக்கு வழங்கப்படவில்லை என்பதை மாணவர் நலப் பொறுப்பாசிரியர்கள் உறுதிபடுத்தியுள்ளனர்,” என மலேசியாகினி-இடம் அவர் தெரிவித்தார்.
பெற்றோர்கள் அதற்கான பாரங்களைப் பூர்த்தி செய்தனர்
2018 பட்ஜெட்டில், இதற்கான நிதி ஒதுக்கீட்டைச் செய்துள்ளபோதும், அத்திட்டம் ஏன் செயல்படுத்தப்படவில்லை என ஹேரி கேள்வி எழுப்பியுள்ளார்.
பி.எஸ்.1எம். பால் திட்டம், 1983 முதல் ‘பள்ளி பால் திட்டம்’ (பி.எஸ்.எஸ்.) என அறியப்பட்டது. இது ஏழை மாணவர்களுக்கான சத்துணவு திட்டத்தின் ஒரு பகுதி, பால் குடிக்கும் பழக்கத்தை ஆரம்பப் பள்ளி மாணவர்கள் மத்தியில் ஊக்குவிப்பதும், ஏழை மாணவர்களுக்குப் போதிய ஊட்டச்சத்து கிடைக்கச் செய்வதுமே இதன் நோக்கம்.
“சத்துணவு திட்டம் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்போது, மார்ச் மற்றும் ஜூன் மாதங்களில் பள்ளிகளுக்கு அனுப்பவேண்டிய, இந்த பி.எஸ்.1எம். பால் வழங்கப்படாதது ஏன்.
“ஆண்டு தொடக்கத்தில், ஆசிரியர்கள் பெற்றோர்களுக்குப் பாரங்களை அனுப்பி, அவர்களின் அனுமதியைப் பெற்றுள்ளனர். ஆனால், ஆண்டு தொடக்கம் முதல், கடந்த மே 9 வரை பால் பள்ளிகளுக்கு வந்து சேரவில்லை.
“எனவே, இதுபற்றி விசாரிக்க வேண்டுமென நான் கல்வி அமைச்சைக் கேட்டுக்கொள்கிறேன்,” என்றார் அவர்