மிட்லெண்ட் மாணவர்கள் தங்கும் விடுதி திட்டம் சமுதாயத்தின் கனவை நிறைவேற்றும், சேவியர்  

 

நாட்டில் மேற்கொள்ளப்பட்ட பல ஆய்வுகள் பெரும்பாலான இந்தியர்கள் கடுமையான ஏழ்மையில் இருப்பதைக் காட்டுகின்றன. இருப்போர் – இல்லாதோர் இடையிலான இடைவெளிகள்அதிகரித்து வருகின்றன.. இதற்குப் பல காரணங்கள் கூறப்பட்டாலும், இன்றைய இளைஞர்களின் ஆற்றல் சரியாகப் பயன்படுத்தப்படாமல் வீணடித்தது ஒரு முக்கியக் காரணமாகும்.

 ஆனால், அக்கறையற்ற அரசால், சமூகப் பார்வையற்ற அரசியல்வாதிகளால் கைவிடப்பட்ட ஒரு சமுதாயமாக நமது இளைஞர்கள் நீண்ட காலமாக இருந்து விட்டதால். அவர்களின் தவறுகளை அவர்களே உணரக்கூடிய நிலையிலிருந்து விலகி விட்டனர்.

சமுதாய இடர்ப்பாடுகளைத் தீர்க்க நோக்கமில்லாமல், திட்டமில்லாமல், கைவிடப்பட்ட சமுதாயமாக நமது இளைஞர்களை ஆக்கி, அவர்களை அம்னோ-பாரிசான் அரசியல்வாதிகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன் படுத்திக் கொண்டனர் என்கிறார் கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவரும், கோலலங்காட் நாடாளுமன்ற உறுப்பினரும், நீர், நிலம் இயற்கை வள அமைச்சருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.

பல்வேறு இந்தியப் பங்காளிக் கட்சிகள் பரிசானின் அரசாங்கத்தில் இருந்தாலும், இந்தியர்களின் இன்னல்களை அரசிடம் எடுத்துரைக்காதது மட்டுமின்றி இந்திய இனத்தை அழிக்க வல்ல குற்றச்செயல்  கலாச்சாரத்தை இளைஞர்களிடமிருந்து ஒழிக்க  எந்த அக்கறையும் காட்டவில்லை. இன்று நமது ஏழ்மைக்கு, நம்மை நாமே அழித்துக் கொள்ளும் வன்முறை கலாச்சாரமே  முக்கியக் காரணமாக மாறி வருகிறது.

இந்திய இளைஞர்களிடம் வேரூன்றியுள்ள போதைப் பொருள், மது, குண்டர் கும்பல் கலாச்சாரங்களின் பிறப்பிடமாக இருப்பது புறம்போக்கு குடியிருப்புகளும், ஏழ்மையுமாகும். ஆனால், அதற்குத் தீர்வு காண்பதை விடுத்து, இளைஞர்களை அரசியல்வாதிகளின் கைத் தடிகளாக அடாவடித்தனத்திற்கு அரணாகப் பயன்படுத்திய கலாச்சாரமும், பொருளாதார வேலை வாய்ப்புகள் மறுக்கப் பட்டதும் இதர முக்கியக் காரணிகளாகின்றன.

 மாணவர் விடுதிக்கான திட்டம்

 ஆக, சமுதாயத்தை நல்வழிப்படுத்த இன்றைய குழந்தைகளுக்கு மாணவர் பருவம் முதலே நல்ல வழிகாட்டல் தேவை. அவர்களின் கல்வி, சமூக மேம்பாடு மீது நாமும், அரசாங்கமும் அதிக அக்கறை காட்ட வேண்டும். அதற்காகவே 2010ம் ஆண்டில் தமிழ்ப்பள்ளி மாணவர் விடுதிக்கான திட்டத்திற்கு வித்திட்டோம்.

ஆனால் அதற்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை நம்மிடம் ஒப்படைக்க அத்தோட்ட மேம்பாட்டு நிறுவனம் இன்னும் சிறிது காலம் எடுத்துக் கொள்ளும் என்கின்ற நிலை இருப்பதால், வேறு இடத்தில் விடுதி திட்டத்திற்கு நாம் தயாராக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

 அதற்கான வரைபடம் மற்றும் கட்டுமான உத்தேசச் செலவுகளின் அடிப்படையில், நமது கோரிக்கைகளுக்கு மதிப்பளித்துச் சிலாங்கூர் மாநில மந்திரி புசாராக இருந்த டத்தோ அஸ்மின் அலி கடந்த ஆண்டு பட்ஜெட்டில் 40 இலட்சம் வெள்ளிகளை இந்தத் திட்டத்திற்கு ஒதுக்கி உதவினார்.

இது ஒரு கண்ணி முயற்சி என்பதுடன் நீண்ட நாள்களாக இப்படிப்பட்ட ஒரு திட்டத்தை எதிர்பார்த்து ஏக்கப் பெருமூச்சு மட்டும் விட்டுக் கொண்டிருந்த சமுதாயம், இந்த விடுதி திட்டம் வெற்றி பெறத் தன்னை முழு அளவில் ஈடுபடுத்திக் கொள்ளும் என்பதில் சந்தேகமில்லை என்கிறார் இத்திட்டத்தின்  மூலக்கர்த்தரும்  கோலலங்காட் நாடாளுமன்ற உறுப்பினரும், நீர், நிலம் இயற்கை வள அமைச்சருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.

இந்த விடுதி திட்டம், திறமையான, ஏழை மாணவர்களுக்கு மட்டும் வழிகாட்டும் ஒரு திட்டமாக இல்லாமல், பல தரப்பட்ட மாணவர்களுக்குப் பற்பல வழிகளில் உதவும், வழிகாட்டும் பயிற்ச்சி பட்டறையாகவும், நல்லதொரு எதிர்காலச் சந்ததிக்கு  வித்திடும் ஒரு மையமாக உருவாக்க வேண்டும் என்ற வேண்டுகோளைச் சமுதாயத்தின்  எல்லாப் பிரிவினரிடத்திலும் வைப்பதாக அவர் கூறினார்.

சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வசதியான இடமாகவும், போக்குவரத்து மையமாக இருக்க வேண்டும் என்பதால் ஷா ஆலாம் மிட்லெண்ட் தமிழ்ப்பள்ளியின் அருகில் இந்த விடுதியை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

இது ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கு உதவும் திட்டமாக மட்டும் அல்லாமல் யுபிஎஸ்ஆர் மாணவர்கள் முதல் எஸ் டி பி எம்  மாணவர்கள் வரை அவர்களைத் தேர்வு பயிற்சிக்குத்  தயார் படுத்தவும், தோட்ட மற்றும் கிராமப்புற மாணவர்களுக்குத் தன்முனைப்புகளையும், நம்பிக்கை, நன்னடத்தைக்கும் வழி காட்டும் ஒரு மையமாக விளங்க வேண்டும்.

இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கு நன்னெறிகளைப் புகுத்தவும், வெற்றிபெற்ற நமது இனப் பட்டதாரிகள் இடைநிலைப்பள்ளி மாணவர்களைத் தத்தெடுப்பது அல்லது பெற்றோர்கள் கட்டுப்பாட்டிலிருந்து விலகி வழி தவறும் மாணவர்களைச் சகோதரத்துவ ரீதியில் திருத்த, நல்வழிகாட்ட வெற்றிபெற்ற மற்ற மாணவர்களைக் கொண்டு முயற்சியெடுப்பதற்கும் இவ்விடுதித் திட்டம்  கைகொடுக்கும் என்கிறார் கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித்தலைவரும், கோலலங்காட் நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.

 சிறைச்சாலைகளுக்குச் செல்வதிலிருந்து நமது செல்வங்களைத் தடுப்பதற்குக் குறுகிய காலப் பயிற்சிகளை, பழக்கங்களை நமது பிள்ளைகளிடையே விதைக்க, அவர்களை மேம்படுத்த இந்தத் தங்குமிடம் கொண்ட பட்டறையின் அவசியத்தை உணர்ந்து இந்தப் புதிய இடம் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளதாக டாக்டர் சேவியர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

 பல்வேறு இந்தியப் பங்காளி கட்சிகள் பரிசானின் அரசாங்கத்தில் இருந்திருந்தாலும், இந்தியர்களின் இன்னல்களை அரசிடம் எடுத்துரைத்து இந்தியர்களிடமிருந்து ஏழ்மையை ஒழிக்க, ஆவணச் செய்ய அவை தவறிவிட்டன. அதே  தவறை, இனி நாமும் தொடர்ந்தால், ஆட்சி மாற்றங்கூட நமக்கு அர்த்தமற்றதாகி விடும், ஏழ்மையே இந்தியர்களின் சொத்தாகிவிடும் என்கிறார் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.

இந்தத் தங்கும் விடுதி திட்டம் வெற்றிபெற வேண்டும். அதற்கு முழு சமுதாயமும் கட்சி, சமய வேறுபாடின்றி இணைந்து நிற்க வேண்டும். இத்திட்டத்தின் வெற்றியை முன்னுதாரணமாக வைத்தே நாட்டில் பல இடங்களில் இதுபோன்ற திட்டங்களுக்கு வித்திட முடியும்.  வெற்றி மட்டுமே  நமக்கு இதில் உறுதுணையாக இருக்கும்.

குடும்பத்துக்கு நமது இளைஞர்களின் பங்களிப்பை உயர்த்தவும். ஆற்றலை அதிகரிக்கவும் உதவும் இத்திட்டம் இச்சமுதாயத்தின்  பொருளாதாரமும் ஓரளவு உயர்வுக்கான வழி வகுக்கும் என்பதை நாம் மறக்கக்கூடாது.

சமுதாய மேம்பாட்டுக்கு  இளைஞர்களை விளையாட்டு, கல்வி, துறைகளில் உயர்த்த , வேலை வாய்ப்புகளில் வெற்றிபெற,  இளைஞர்களை  நல்வழிப்படுத்தும் வண்ணம் பக்காத்தான் ஹராப்பான் அரசு சமூகச் சீர்திருத்தக் கொள்கைகளை வரைய இந்தத் திட்டம் மிக முக்கியமான  முன்னோடியாக அமையும். இந்திய இளைஞர்களைத் தவறான பழக்கங்களிலிருந்து முற்றாக விடுவிக்க உதவும் ஒரு திட்டமாக இதை உருவாக்கும்  பொறுப்பு இந்தியச் சமுதாயத்துடையது என்பதால் இதில் அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்  டாக்டர் சேவியர் ஜெயக்குமார்