ஷஹிடானைக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

கங்கார் செஷன்ஸ் நீதிமன்றம், வயதுகுறைந்த பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டை எதிர்நோக்க நீதிமன்றம் வர தவறிய முன்னாள் அமைச்சர் ஷாஹிடான் காசிமைக் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தது.

அரசுத் தரப்பு விண்ணப்பித்துக் கொண்டதை அடுத்து செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி ஜொகார்ரி அபு ஹ்சான் கைது ஆணை பிறப்பித்தார்.

ஆராவ் எம்பியுமான ஷஹிடானின் வழக்குரைஞர் சைட் முகம்மட் அன்வார் சைட் லொக்மான் ஹகிம், கைது ஆணைக்கு ஆட்சேபனை தெரிவித்தார். அது குறித்து தன் கட்சிக்காரருக்கோ தனக்கோ முன்கூட்டியே தெரிவிக்கப்படவில்லை என்றார்.

“நீதி மன்றம் வந்த பிறகுதான் (கைது ஆணை பிறப்பிக்கப்படுவது) தெரிந்தது. என் கட்சிக்காரர் வெளிநாட்டில் இருக்கிறார்”, என்றாரவர்.

கைது ஆணையை இரத்துச் செய்ய எதிர்த்தரப்பு மனு செய்து கொள்ளும் என்றவர் சொன்னார்.

“ஒரு பிரபலமான அரசியல்வாதி சம்பந்தப்பட்ட முக்கிய வழக்கு இது. பெர்லிசைச் சேர்ந்தவாரான ஷஹிடான் எங்கும் தப்பி ஓடவில்லை”, என்றாரவர்.

முகநூல் பதிவுகளிலிருந்து ஷஹிடான் இப்போது உம்ரா செய்வதற்காக புனித பூமியான சவுதி அரேபியா சென்றுள்ளார் என்று தெரிகிறது.

ஷஹிடான் 15 வயதாகும் ஒரு பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறும் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் உலா வந்து கொண்டிருக்கிறது

அச்சம்பவம் அக்டோபர் 21-இல் நிகழ்ந்ததாம்.