பிடிபடாமல் தப்பி ஓடிக் கொண்டிருக்கும் தொழில் அதிபர் ஜோ லோவிடம் மலேசிய கடப்பிதழ் இல்லையென்றால் என்ன, அவர் தாய்லாந்து, ஆஸ்திரேலியா அல்லது நியு சிலாந்து கடப்பிதழ்களைப் பயன்படுத்திப் பயணம் செய்யக்கூடும் என்று கருதி அது குறித்து விசாரணை செய்யப்படுவதாக த ஸ்டார் ஆன்லைன் தெரிவித்துள்ளது.
மலேசியாவும் செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸும் அவருக்குக் கொடுத்திருந்த கடப்பிதழ்களை இரத்துச் செய்து விட்டன.
அந்நாடுகளுடன் லோவுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் நெடுங்காலமாகவே வர்த்தகத் தொடர்புகள் இருந்து வந்திருப்பதாகவும் அது அந்நாட்டுப் பயண ஆவணங்கள் பெறுவதற்கு உதவி இருக்கலாம் என்றும் பெயர் குறிப்பிப்பிடாத ஒரு வட்டாரம் தெரிவித்ததாக ஸ்டார் ஆன்லைன் கூறிற்று.
“அவர்களுக்கு(லோ குடும்பத்தாருக்கு) தாய்லாந்து உறவினர்கள் உண்டு. 1960, 70களில் அவரின் தாத்தா அந்நாட்டில் நிறைய தொழில் செய்தார், முதலீடு செய்தார்.
“அந்த மூத்தவர் நீண்ட காலம் பெங்கோக்கில் இருந்திருக்கிறார்”.
லோவின் தொடர்புகள் தாய்லாந்து கடப்பிதழ் பெறுவதற்கு உதவி இருக்கலாம் என்று அவ்வட்டாரம் தெரிவித்தது.
லோவுக்கு ஆஸ்திரேலியாவிலும் நியு சிலாந்திலும் நிறைய சொத்துகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக மலேசியாகினி ஆஸ்த்ரேலிய மற்றும் நியு சிலாந்து குடிநுழைவுத் துறையினருடன் தொடர்பு கொண்டுள்ளது.