யூ.ஐ.ஏ. தலைவர் பதவியை இராஜினாமா செய்ய மஸ்லீ ஒப்புக்கொண்டார்

சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தின் (யூ.ஐ.ஏ.) தலைமை பதவியில் இருந்து விலக, கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக் ஒப்புக்கொண்டார்.

அவருக்குப் பதிலாக ஒருவரை நியமிக்கும் பணியிலும் பிரதமர் மற்றும் யூ.ஐ.ஏ. அரசியலமைப்புத் தலைவர் சுல்தான் அஹமத் ஷாவின் ஒப்புதலைப் பெறும் நடவடிக்கையிலும் அவர் இறங்கியுள்ளதாக சில ஆதாரங்கள் கூறியுள்ளன.

பல்கலைக்கழகத்தின் சுதந்திரம், அரசியல் அதிகாரத்தால் கட்டுப்படுத்தப்படும் என்ற அச்சத்தில், மாணவர் ஆர்வலர்கள் சிலர் மஸ்லீயின் நியந்த்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததை அமைச்சரவை ஏற்றுக்கொண்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை தொடக்கம், நான்கு நாள்களுக்கு நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழா முடிவடையும் வரை, அவரது இராஜினாமாவை ஒத்திவைக்க வேண்டியிருப்பதாக மஸ்லீயின் அலுவலகம் தெரிவித்துள்ளதாக ஃப்.எம்.தி. செய்தி வெளியிட்டுள்ளது.

“அதற்கு (பல்கலைக்கழகம்) ஒரு தலைவர் தேவைபடுகிறார், பட்டமளிப்பு விழாவிற்குப் பின்னர், பதவி மாற்றம் நடைபெறும்,” என்று அவரது உதவியாளர்களில் ஒருவர் கூறியுள்ளார்.