இராமசாமி : இந்தியர் குடியேற்றம் தொடர்பான கருத்தரங்கை யூகேஎம் தொடர வேண்டும்

இந்தியர்களின் மலேசியக் குடியேற்றம் தொடர்பான கருத்தரங்கை, மலேசியத் தேசியப் பல்கலைக்கழகம் (யூகேஎம்) தொடர வேண்டும் எனப் பினாங்கு துணை முதல்வர் பி இராமசாமி தெரிவித்துள்ளார்.

அந்தத் தலைப்பு தவறானதாகக் கூறப்பட்டாலும், சகிப்புத்தன்மையுடன் கல்வித் தொடர்பிலான அக்கருந்தரங்கை நடத்த ஊக்கப்படுத்த வேண்டும் என்றார் அவர்.

“நான் இந்தக் கருத்தரங்கிற்கு ஆதரவு தருகிறேன், நீங்கள் இதுபோன்ற விஷயங்களைச் செய்ய அனுமதிக்க வேண்டும், மக்கள் சுதந்திரமாக இவற்றில் பங்கேற்க வேண்டும்,” என இராமசாமி மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

எதிர்வரும் நவம்பர் 14-ம் தேதி, புதன்கிழமை, ‘தீபகற்ப மலேசியாவில் இந்திய சமூகம்: புலம்பெயர்வா அல்லது குடியேற்றமா? என்ற தலைப்பில், யூ.கே.எம். இயற்கை மற்றும் மலாய் நாகரிக நிறுவனம் (ஆத்மா) இக்கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளது.

சில தரப்பினரின் கண்டனத்திற்குப் பின்னர், இக்கருத்தரங்கிற்கானத் தலைப்பை மாற்றவுள்ளதாக யூ.கே.எம். அறிவித்தது.

அதுமட்டுமின்றி, அக்கருத்தரங்கில் பேசவுள்ள 4 பேச்சாளர்களும் மலாய் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கல்வியாளர்கள் யாரும், தங்கள் அழைப்பை ஏற்று கருத்தரங்கில் பேச வரவில்லை என்றும் ஆத்மா தனது அறிக்கையில் கூறியுள்ளது. ஆனால், ஆத்மா தனக்கு அழைப்பு விடுத்தால், இக்கருத்தரங்கில் பேசத் தயாராக இருப்பதாக இராமசாமி கூறியுள்ளார்.

“யூ.கே.எம். என் பழையப் பல்கலைக்கழகம், நான் அங்கு ஓர் அரசியல் பேராசிரியராக பணியாற்றி இருக்கிறேன், அவர்கள் என்னை அழைத்தால், எனக்கு வாய்ப்பு இருந்தால், நான் அதில் கலந்துகொள்வேன்.

“இப்போது நான் ஓர் அரசியல்வாதி என்பதால், ஒருவேளை எனக்கு வேறு எதுவும் தெரியாது என்று அவர்கள் நினைத்திருக்கலாம்,” என்று அவர் ஒரு சிரிப்புடன் கூறினார்.

இதற்கு முன்னர் ஒருமுறை, மலேசிய அறிவியல் பல்கலைக்கழக, சர்வதேசக் கொள்கை ஆராய்ச்சி மற்றும் ஆய்வு மையத்தில், இந்தியர்கள் அரசியலமைப்பு மற்றும் குடியேற்றம் தொடர்பான பொது விவாதம் ஒன்றில் இராமசாமி ஈடுபட்டுள்ளார்.

அதில், பேராசிரியர் டாக்டர் அஹ்மட் முராட் மெரிகான்-உம் ஒரு பேச்சாளராக கலந்துகொண்டுள்ளார்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வர்த்தகர் என்ற முறையிலும்; அல்லது பிரிட்டிஷாரால் தோட்டத் தொழிலாளராகவும் இந்தியர்கள் மலாயாவில் குடியேறினர். இவ்விவகாரத்தில், இனிமேலும் விவாதம் இல்லை, இது ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று என்று இராமசாமி கூறினார்.