கடந்த 14-வது பொதுத் தேர்தலில், கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை அரசாங்கம் பூர்த்தி செய்யும் எனத் துன் டாக்டர் மகாதிர் முகமட் வலியுறுத்தினார்.
மக்கள் தாங்கள் தேர்வு செய்த அரசாங்கத்தில் இருந்து கிடைக்கும் வசதி, வாய்ப்பு, சலுகைகளுக்காகக் காத்திருக்கிறார்கள் என்பது தெரியும் என்று பிரதமர் கூறினார்.
அந்தச் சமயத்தில், நான்கு எதிர்க்கட்சிகள் இணைந்து, 61 ஆண்டுகளாக இருந்த நாட்டின் ஆட்சியை மாற்றியமைத்தன என்றார் அவர்.
“எங்களால் வாக்குறுதிகளை நிறைவேற்றவும், நாட்டைக் காப்பாற்றவும் முடியும் என்று நான் நம்புகிறேன்,” என்று நேற்றிரவு, ரெம்பாவ்வில் நடந்த, 2018-ஆம் ஆண்டு, தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில், கலந்துகொண்ட அவர் கூறினார்.
பிரதமரோடு, அவரின் மனைவி டாக்டர் சித்தி ஹஸ்மா முகமட் அலி, பிரதமர் துறை அமைச்சர் பி வேதமூர்த்தி, தொலைத் தொடர்பு மற்றும் பல்லூடகத் துணையமைச்சர் எடின் சஸ்லீ ஷித், ரெம்பாவ் எம்பி கைரி ஜமாலுட்டின், நெகிரி செம்பிலான் பெர்சத்து தலைவர் டாக்டர் ராய்ஸ் யாத்திம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
முன்னதாக, டாக்டர் மகாதிர் மற்றும் சித்தி ஹஸ்மா இருவரும், ரெம்பாவ்வில் உள்ள விவேகானந்தா குழந்தைகள் காப்பகத்திற்கு வருகை மேற்கொண்டனர்.
மே 10-ல், நாட்டின் ஏழாவது பிரதமராகப் பதவியேற்ற பின்னர், டாக்டர் மகாதீர் இரண்டாவது முறையாக நெகிரி செம்பிலானுக்கு வருகை புரிந்திருக்கிறார். முதல் முறையாக, கடந்த அக்டோபர் 8-ம் தேதி அம்மாநிலத்திற்கு அவர் வந்தார்.
- பெர்னாமா