அவ்கு சட்டங்களில் திருத்தம்: அமைச்சரவைப் பச்சைக் கொடி காட்டியது

அடுத்த மாதம், உயர்க் கல்வி கூடங்கள் சம்பந்தப்பட்ட சில சட்டங்களைத் திருத்தும் வகையில், நாடாளுமன்றத்தில் சில சட்டப் பிரிவுகள் முன்வைக்கப்பட்டு, விவாதிக்கப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக், அமைச்சரவை அதற்குப் பச்சை கொடி காட்டியுள்ளதாகவும், பல்கலைக்கழக மாணவர்கள் அரசியல் கட்சி நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தடுக்கும் சட்டங்களை அது அகற்றும் என்றும் கூறினார்.

திருத்தம் காணவுள்ள மூன்று சட்டங்கள் :

– 1971 ஆம் ஆண்டின் பல்கலைக்கழக மற்றும் பல்கலைக்கழகக் கல்லூரிகள் சட்டம், பிரிவு 15 (2)

– தனியார் கல்வி நிறுவனங்கள் சட்டம், பிரிவு 47 (2) (சி); மற்றும்,

– கல்வி நிறுவனங்களின் (ஒழுங்குமுறை) சட்டம் 1976, பிரிவு 10 (2) (சி).

“ஜனநாயகக் கட்டமைப்புகளை வலுப்படுத்தும் வகையில், அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் அரசியல் மாற்றத்திற்கு ஏற்ப இந்த படிநிலை உள்ளது

“குறிப்பாக, பல்கலைக்கழக மாணவர்கள் தங்கள் கருத்துகளைச் சுதந்திரமாகப் பேசுவதற்கும், உயர்க்கல்விக் கூட வளாகத்தில் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், சமநிலையான பட்டதாரிகளை உருவாக்குவதற்கும், தற்போதையப் பிரச்சினைகளுக்குக் குரல் கொடுப்பதற்கும் அதிக இடமளிப்பதாக இது அமையும்,” என்று அவர் கூறினார்.

பக்காத்தான் ஹராப்பான் தேர்தல் அறிக்கையில், 1971 பல்கலைக்கழக மற்றும் பல்கலைக்கழகக் கல்லூரி சட்டத்தை (அவ்கு) இரத்து செய்யுமென வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

எனினும், மஸ்லீயின் அறிக்கையில் அதுபற்றி குறிப்பிடப்படவில்லை.