முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், முன்னாள் அமைச்சர்கள் இருவர், ஒரு துணை அமைச்சர் ஆகியோருடன் மேலும் மூவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்களாம்.
சரவாக் பள்ளிகளில் ரிம1.25 பில்லியன் செலவில் சூரிய ஆற்றலைப் பயன்படுத்தும் திட்டங்களில் நிகழ்ந்துள்ள மோசடி தொடர்பில் நஜிப், அவரின் உதவியாளர், ஒரு முன்னாள் அமைச்சர் ஆகியோர்மீது விரைவில் குற்றம் சாட்டப்படும் என பெரித்தா ஹரியான் கூறியது.
மலேசியாகினி ஜூன் மாதமே, 2017-இல் நஜிப் சரவாக்கில் 369 கிராமப்புறப் பள்ளிகளுக்கு சூரிய ஆற்றலைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்க ஒரு நிறுவனத்தை நியமனம் செய்யுமாறு கல்வி அமைச்சுக்கு உத்தரவிட்டார் என்ற செய்தியை வெளியிட்டிருந்தது.
இவ்விவகாரம் தொடர்பில் நஜிப்பின் சிறப்பு அதிகாரி ஒருவரும் முன்னாள் கல்வி அமைச்சர் மஹாட்ஸிர் காலிட்டும் எம்ஏசிசி- யால் விசாரிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, கோலாலும்பூர் மாநகராட்சி மன்ற நில விற்பனை தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஒருவர்மீது குற்றஞ்சாட்டப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கூட்டரசுப் பிரதேச முன்னாள் அமைச்சர் தெங்கு அட்னான் மன்சூர் டிபிகேஎல் நிலக் கொள்முதல் தொடர்பாக எம்ஏசிசி 12 தடவை தம்மிடம் விசாரணை செய்திருப்பதாகக் கடந்த மாதம் தெரிவித்திருந்தார்.
மற்றொரு நிலவரத்தில், தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழக(ஃபினாஸ்)த்தில் நிகழ்ந்துள்ள ரிம20 மில்லியன் முறைகேடு தொடர்பில் ஒரு துணை அமைச்சர்மீது குற்றஞ்சாட்டப்படும் எனத் தெரிகிறது.
அரசாங்கக் குத்தகைகளைப் பெற்றுத் தருவதில் இடைத் தரகராக செயல்பட்டு மில்லியன் கணக்கில் ஈட்டிய ஒரு எம்பியும் விரைவில் கூண்டில் ஏற்றப்படுவார்.
இதனிடையே, நியு ஸ்ரேய்ட்ஸ் டைமஸ், பெல்டாவின் முன்னாள் தலைவரான முகம்மட் ஈசா அப்துல் சமட் அவரது காலத்தில் அந்த நிறுவனத்தில் நிகழ்ந்த முறைகேடுகளுக்காக நீதிமன்றத்தில் நிறுத்திக் குற்றஞ்சாட்டப்படுவார் என்று அறிவித்துள்ளது.