துணைப் பிரதமர் : இந்தியச் சமூகம் பின்தங்கி நிற்க விடமாட்டோம்

நாட்டு மக்களின் ஒட்டுமொத்த வடிவத்தையும் சமநிலையற்ற நிலைக்குக் கொண்டுசெல்லும் என்பதால், இந்தியச் சமூகம் பின்தங்கிய நிலையில் விடப்பட மாட்டார்கள் எனத் துணைப் பிரதமர் டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயில் கூறியுள்ளார்.

இந்தியர்கள் உட்பட, அனைத்து மக்களுக்கும் நல்வாழ்வளிக்கும் சமூகச் சீர்திருத்த செயற்பட்டியலை அமுல்படுத்துவதில் அரசாங்கம் தீவிரமாக உள்ளது. எனவே, தேசிய மேம்பாட்டிலிருந்து எந்தவொரு தனிநபரும் விடுபட முடியாது என்றார் அவர்.

“சீர்திருத்தம் செய்வதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். பிரதமரின் RMK11-இன் அரையாண்டு கால மதிப்பாய்வு மற்றும் நிதி அமைச்சரின் 2019 வரவு செலவு திட்டமும், அரசாங்கம் சீர்திருத்த செயற்பட்டியலை அமல்படுத்துவதில் உறுதியாக உள்ளதையே காட்டுகின்றன,” என நேற்று கோலாலம்பூர், அம்பாங்கில், பாண்டான் நாடாளுமன்ற சேவை மையத்தின் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில் பேசிய அவர் மேலும் கூறினார்.

மக்களுக்கும் நாட்டிற்கும் நன்மைகளை கொண்டுவரும் சீர்திருத்த செயற்பட்டியலை அமுல்படுத்துவது முக்கியம் என்பதை அரசாங்கம் உணர்ந்துள்ளது, ஆனால் அதற்கு கால அவகாசம் தேவை என டாக்டர் வான் அசிஸா தெரிவித்துள்ளார்.

மக்களின் ஆதரவு மற்றும் புதிய அரசாங்க நிர்வாக உறுப்பினர்களின் தீவிரத்தன்மை நல்ல பலன்களை விளைவிக்கும் என்று நம்புவதாக அவர் மேலும் கூறினார்.

-பெர்னாமா