மிட்லெண்ட் தமிழ்ப்பள்ளியில்,  மாணவர் விடுதிக்கான கட்டுமானப் பணி தொடங்கியது!

எட்டு வருடங்களாக பேசப்பட்டு வந்த தமிழ்ப்பள்ளி மாணவர் விடுதியின் கட்டுமான பணி நேற்று துவங்கப்பட்டது. அதனை சிலாங்கூர் மாநில மந்திரி புசார் அமிருடின் ஷாரி யும்  கோலலங்காட் நாடாளுமன்ற உறுப்பினரும், நீர், நிலம் இயற்கை வள அமைச்சருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமாரும் மிட்லெண்ட் தமிழ்ப்பள்ளியில் தொடக்கி வைத்தனர்.

2010 ஆம் ஆண்டில் சிலாங்கூர் ஆட்சிகுழு உறுப்பிணராக இருந்த சேவியர் ஜெயக்குமார் இந்த மாணவர் விடுதி  திட்டத்தை அறிவித்தார். அதன் பிறகு 2013-இல் தொடங்கப்பட இருந்த திட்டம் நிலப்பிரச்சனையால் கைவிடப்பட்டது.

இருப்பினும், இது தொடர்பாக  உறுதியாக இருந்த சேவியர் அவர்கள், இன்று அதற்கான பணி தொடக்கத்தை அறிவித்ததோடு, அதன் தொடக்க வேலையையும் ஆரம்பித்து வைத்தார்.

சுமார் ரிங்கிட 4 மில்லியணில் கட்டப்பட உள்ள இந்த ஐந்து மாடி விடுதி, 200 மாணவர்கள் தங்கும் வசதிகளை கொண்டிருக்கும்.

இந்த விடுதி திட்டம், திறமையான, ஏழை மாணவர்களுக்கு மட்டும் வழிகாட்டும் ஒரு திட்டமாக இல்லாமல், பல தரப்பட்ட மாணவர்களுக்குப் பற்பல வழிகளில் உதவும், வழிகாட்டும் பயிற்சிப் பட்டறையாகவும், நல்லதொரு எதிர்காலச் சந்ததிக்கு  வித்திடும் ஒரு மையமாக உருவாக்க வேண்டும் என்ற வேண்டுகோளைச் சமுதாயத்தின்  எல்லாப் பிரிவினரிடத்திலும் வைப்பதாக இந்த தொடக்க விழாவில் உரையாற்றிய சேவியர் கூறினார்.

“சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வசதியான இடமாகவும், போக்குவரத்து மையமாகவும் இருக்க வேண்டும் என்பதால் ஷா ஆலாம் மிட்லெண்ட் தமிழ்ப்பள்ளியின் அருகில் இந்த விடுதியை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது”

“இது ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கு உதவும் திட்டமாக மட்டும் அல்லாமல் யுபிஎஸ்ஆர் மாணவர்கள் முதல் எஸ் டி பி எம்  மாணவர்கள் வரை அவர்களைத் தேர்வு பயிற்சிக்குத்  தயார் படுத்தவும், தோட்ட மற்றும் கிராமப்புற மாணவர்களுக்குத் தன்முனைப்புகளையும், நம்பிக்கை, நன்னடத்தைக்கும் வழி காட்டும் ஒரு மையமாகவும் விளங்க வேண்டும்.” என்றார் , நீர், நிலம் இயற்கை வள அமைச்சருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.

இந்தத் தங்கும் விடுதி திட்டம் வெற்றிபெற வேண்டும். அதற்கு முழு சமுதாயமும் கட்சி, சமய வேறுபாடின்றி இணைந்து நிற்க வேண்டும். இத்திட்டத்தின் வெற்றியை முன்னுதாரணமாக வைத்தே நாட்டில் பல இடங்களில் இதுபோன்ற திட்டங்களுக்கு வித்திட முடியும்.  வெற்றி மட்டுமே  நமக்கு இதில் உறுதுணையாக இருக்கும் என்று வேண்டுகோள் விடுத்தார்  டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய சிலாங்கூர் மந்திரி புசார், இந்த கட்டுமானப்பணி ஒரு வருடத்திற்குள் பூர்த்தி செய்யப்படும் என்றார். இதற்கான நிதி மாநில கருவூலத்தின் கட்டுபாட்டில் இருந்து பட்டுவாடா செய்யபப்டும் என்றும்  ஷ அலாம் மாநாகராட்சி மன்றம் கட்டுமான பணிகளின் கண்காணிப்பாளாரக இருக்கும் என்றார்.

இந்நிகழ்ச்சியி ல் வரவேற்புரையாற்றிய  மிட்லெண்ட் தமிழ்ப்பள்ளியின் வாரியத்தலைவர் கா. உதயசூரியன், அனைத்து வசதிகளையும் கொண்ட ஒரு சிறந்த தமிழ்ப்பள்ளியாக மிட்லெண்ட் தமிழ்ப்பள்ளி திகழும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இந்த மாணவர் விடுதி திட்டம், வசதி குறைந்த நிலையில் உள்ள 200 மாணவர்களுக்கு பயன் அளிக்கும் என்றார்.

நேற்று மாலையில் நடந்த இந்த வரலாற்று நிகழ்ச்சியில் கிள்ளான் நடாளுமன்ற உறுப்பிணர் சார்ல்ஸ் சந்தியாகோ,  ஷா அலாம் மாநாகராட்சி மன்ற அதிகாரிகள், கல்வி அமைச்சின் அதிகாரிகள், பள்ளியின் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் சமூக இயக்கங்களின் தலைவர்கள் மற்றும் ஆர்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.