சரவாக் பிகேஆர் தொகுதித் தலைவர் ஒருவர் சனிக்கிழமை ஜூலாவ் பிகேஆர் தொகுதித் தேர்தலில் பணம் கொடுத்து வாக்குகள் வாங்கப்பட்டதை நிரூபிக்கும் “மறுக்கப்பட முடியாத சான்றை” மலேசிய ஊழல்தடுப்பு ஆணையத்திடம் ஒப்படைத்திருப்பதாகக் கூறுகிறார்.
அது குறித்து பெத்தோங் தொகுதித் தலைவர் வெர்னோன் அல்பர்ட் கெடிட் இன்று கூச்சிங்கில் புகார் செய்தார்.
“ஜூலை 10, ஜூலாவில் தடையற்ற முறையில் அப்பட்டமான ஊழல் பரவலாக நிகழ்ந்திருப்பதைக் காண்பிக்கும் அதிரவைக்கும், திடுக்கிட வைக்கும் சான்று இந்தச் சின்னஞ்சிறு விரலியில் உள்ளது”, என்றாரவர்.
சனிக்கிழமை சிபுவுக்குத் தெற்கே உள்ள சின்னஞ்சிறு நகரமான ஜூலாவில் சுமார் 2,000 பேர் தொகுதித் தேர்தலில் வாக்களிக்க வந்திருந்தனர்.
வாக்களிக்கப் பயன்படுத்தப்பட்ட கைக்கணினியில் தகிடுதத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டதை அடுத்து வாக்களிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.
தேர்தலில் ஊழல் நிகழ்ந்திருப்பதாகக் கூறி அதற்கான ஆதாரங்களைக் காண்பிக்க துனிச்சல்மிக்க பலர் முன்வந்தனர் என்று கெடிட் கூறினர்.