பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் அமைச்சரவையை மாற்றி அமைக்கப் போவதாக தாம் எதுவும் கேள்விப்படவில்லை என்கிறார் நிதி அமைச்சர் லிம் குவான் எங்.
“அமைச்சரவைக் கூட்டங்களிலோ பக்கத்தான் ஹரப்பான் கட்சிக் கூட்டங்களிலோ அது குறித்து எதுவும் கேள்விப்படவில்லை. அது வெறும் ஊகமாகக்கூட இருக்கலாம்”, என்றாரவர்.
“அப்படியே எதுவும் நடப்பதாக இருந்தால் அதைப் பிரதமர்தான் முடிவு செய்வார்”, என வர்த்தக வானொலி நிலையம் பிஎப்எம்-மின் காலைநேர நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது லிம் கூறினார்.
ஹரப்பான் அமைச்சர்களையும் துணை அமைச்சர்களையும் லிம் தற்காத்துப் பேசினார்.
“நான் அறிந்தவரை என் சகாக்கள் எல்லாருமே நன்றாகவே செயல்படுகிறார்கள்”, என்றார்.
அடுத்த பிரதமராக பதவி ஏற்கவுள்ள அன்வார் இப்ராகிம் போர்ட் டிக்சன் இடைத் தேர்தலில் வெற்றிபெற்ற நாளிலிருந்து அமைச்சரவை மாற்றி அமைக்கப்படப் போகிறது என்ற பேச்சு அடிபடுகிறது.